மருத்துவம்

மாதவிடாய் கால இடுப்பு வலி, வயிற்று வலி குறைய...!

எனக்கு வயது 48. வீட்டு விலக்கு (மாதவிடாய்) வரும்போது 2 வது நாள் அதிகமாக ரத்தப்போக்கு இருக்கிறது. ஒருமாத இடைவெளி என்று இல்லாமல் சீக்கிரமே வந்துவிடுகிறது. மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கால்வலி

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 48. வீட்டு விலக்கு (மாதவிடாய்) வரும்போது 2 வது நாள் அதிகமாக ரத்தப்போக்கு இருக்கிறது. ஒருமாத இடைவெளி என்று இல்லாமல் சீக்கிரமே வந்துவிடுகிறது. மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே கால்வலி, உடல் வலி, தலைவலி என்று ஏதாவது ஒரு வலி வந்துவிடுகிறது. வாய்ப்புண் அடிக்கடி வருகிறது. இது எதனால்? இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

ஏ.கோமதி, கிருஷ்ணாபுரம்.

உடல் உஷ்ணத்தினால் அதிக உதிரப் போக்கு ஏற்படலாம். வாய்ப்புண் வருவதற்கும் அதுவே காரணமாகலாம். உதிரப் போக்கு உள்ள நாட்களில் தலைக்குத் தண்ணீர் விட்டு குளிப்பதால் கால்வலி, உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகள் தோன்றக் கூடும். கசகசாவை மாதவிடாய் காலத்துக்கு முன் ஒருவாரம் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் வலி அனைத்தும் நீங்கிவிடும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து 4 பங்கு  சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்துச் சாப்பிட்டால், மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி குறையும்.

 தானிய உணவுப் பொருட்களில் மிகச் சிறந்தவகையான கோதுமையை, பெருங்குருணையாக்கி அன்னம் சமைத்துச் சாப்பிடுவது, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, பூரி என்ற வகையிலும், சத்துமாவு, கஞ்சியாகவும் சாப்பிட்டால் மாதவிடாய் உதிரப் பெருக்கைக் கட்டுப்படுத்தலாம். வாயுப்பிடிப்பு, வாயுவலி உள்ளவருக்கு ஏற்ற உணவுப் பண்டம். உளுந்து சேர்ந்த அரிசியை வேக வைத்து உண்பது, எள்ளும் உளுந்தும் உணவில் அதிகம் சேர்ப்பதும் நல்லதே.

 புஷ்யாணுகம் எனும் ஆயுர்வேத சூரண மருந்து உங்களுக்குப் பயன்படலாம். ஒரு ஸ்பூன் (5 கிராம்) சூரணத்தை 1 1/2 ஸ்பூன் தேன் விட்டுக் குழைத்து 1/2 ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். சதாவரீகுலம் எனும் லேகிய மருந்தை மதிய உணவுக்கு முன் சாப்பிட, கருப்பையைச் சார்ந்த உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவையை மட்டுப்படுத்தும். தான்வந்திரம் எனும் தைலத்தை வாரம் இருமுறை அதாவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உடலெங்கும் தேய்த்து குளித்துவர, உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம். குமார்யாஸவம் எனும் மருந்தை சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி) காலை இரவு சாப்பிட்டு வர, பசி நன்றாக எடுக்கும். உதிரப் போக்கைச் சரியான அளவில், நேரத்தில் வரும்படி உடலை அமைத்துக் கொடுக்கும்.

 உணவில் அதிக காரம், உப்பு, புளி தவிர்க்கவும். அலுவலகத்தில் உடல் களைப்பைத் தரும்படியான செயல்களைக் குறைக்கவும். மனக்கொதிப்பை ஏற்படுத்தும்படியான சூழ்நிலை இருந்தால், அவ்விடத்தைவிட்டு உடனடியாக விலகிவிடவும். மனதில் அமைதியான தன்மையை வளர்த்துக் கொள்ளவும். இரவில் அதிகம் கண் விழித்திருக்காமல் படுத்து உறங்கவும். உடல் - மன அமைதி இந்த வயதில் உங்களுக்கு அதிகம் தேவை. மாதவிடாய் நின்று விடுவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுவதால் உடல் உழைப்பையும், மனதுக்கான சூழ்நிலையும் சரியான விகிதத்தில் கட்டுப்படியான நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்வது அவசியம்.   

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT