இதய ரத்தக் குழாயில் ஏற்படும் கரோனரி தமனிகள் அடைப்பைச் சரி செய்ய இயற்கையான முறையில் மறையக் கூடிய கம்பிச்சுருள் பொருத்தும் அறுவைச் சிகிச்சை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.
இதய ரத்தக் குழாய் அடைப்பு உள்ளவர்களுக்கு இதய ரத்தக் குழாய் அடைப்பு சீரமைப்பு சிகிச்சை மேற்கொள்வது தற்போது சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது. இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் அடைப்புகளால் பாதிக்கப்பட்டால். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு செயற்கை கம்பிச்சுருள் பொருத்தப்படுவது வழக்கம்.
இதில் செயற்கை கம்பிச்சுருள் பொருத்தப்படுவதால் நோயாளிகளுக்கு பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. செயற்கை கம்பிச்சுருள் பொருத்திய நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பொதுவாக ரத்தக் குழாய் சுருக்கம் ஏற்படும் போது கம்பிச்சுருள் பொருத்தப்படும். இதில் செயற்கையான கம்பிச்சுருள் பொருத்தும் போது ஏற்கனவே உள்ள ரத்தக் குழாயின் அளவை விட சில மி.மீ. அளவு குறையும். அதன் காரணமாக அப்பகுதியில் மீண்டும் அடைப்புகள் வராமல் இருக்க மற்றும் ரத்தம் உறையாமல் தடுக்க மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
அடிக்கடி மருத்துவப் பரிசோதனை அவசியம்: செயற்கை கம்பிச்சுருள் பொருத்தியவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று பரிசோதனை மேற்கொள்வது அவசியம். தற்போது இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு பிரச்னை ஏற்படுகிறது. அப்போது ரத்தக் குழாய்களைச் சீரமைக்க நுண்துளை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும். அதன் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
நவீன ஸ்டென்ட் அறிமுகம்: இதைத் தடுக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை முறையில் ரத்த குழாயுடன் மறையக் கூடிய Polylactide Stent அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தக் குழாயுடன் மறையக் கூடிய கம்பிச் சுருளை (stent) பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டும் பொருத்த முடியும்.
இந்த வகை கம்பிச்சுருள் பொருத்திய பின் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் சிறிய வயதில் இதய ரத்தக் குழாய்களில் இந்த வகையான கம்பிச்சுருள் பொருத்தியவர்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வித இடர்பாடுகள் இல்லாமல் வாழ முடியும்.
இதய வால்வு சுருக்கத்திற்கு கால் வழியாக நுண்துளை மூலம் Baloon Valvuloplasty அறுவைச் சிகிச்சையும், இதயத் துடிப்பு குறைபாடுகள் (மிக அதிகமாக துடிப்பு) உள்ளவர்களுக்கு 3-டி கார்டோ மேப்பிங் மூலம் துல்லியமாக பரிசோதனை மேற்கொண்டு நுண்துளை மூலம் Ablation சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர் எம். மோகன்,
இதய மருத்துவ நிபுணர்,
கோவை மெடிக்கல் சென்ட்டர் மற்றும் மருத்துவமனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.