செய்திகள்

சென்னையிலிருந்து கோவைக்கு விமான ஆம்புலன்ஸில் வந்த நோயாளி!

தினமணி

விமான ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் கோவையைச் சேர்ந்த நோயாளி வெள்ளிக்கிழமை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த 69 வயது ஆண் நோயாளிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மாற்று கல்லீரல் கிடைத்தது. இதையடுத்து, நோயாளியை உடனடியாக கோவையில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டது.
கல்லீரலை தானம் பெற்ற உடனே பொருத்த வேண்டும் என்பதாலும், நோயாளியை சாலை மார்க்கமாகக் கொண்டு வரும் சூழ்நிலை இல்லாததாலும், அவரை விமான ஆம்புலன்ஸில் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டது.
"ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ' என்ற நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில், கோவை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மாலை 3.45 மணிக்கு நோயாளி கொண்டு வரப்பட்டார். அவருடன் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரும் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து "க்ரீன் காரிடார்' முறையில் சாலைப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, மருத்துவமனைக்கு நோயாளி கொண்டு செல்லப்பட்டார்.
சிறப்பு என்ன?: சாதாரண விமானம் அல்லது ஹெலிகாப்டரை காட்டிலும் ஆம்புலன்ஸ் விமானங்களில் நோயாளியை நிலைப்படுத்துவதற்கான மருத்துவ உதவி அளிக்கப்படும். உயிர் காக்கும் முதலுதவி, ரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகள், நரம்புகளின் வழியே செலுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை விமானத்திலேயே அளிக்க முடியும்.
பொதுவாக, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக தானம் பெறப்படும் இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளே சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். நோயாளி ஒருவர் விமானத்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது அரிதானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT