செய்திகள்

இதய நோய் இல்லாத இதய நோயாளிகள்! - நீங்களும் பாதிக்கப்படலாம்!! 

டாக்டர் சு. வைத்தியநாதன்

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் பலரும்கூட தங்களுக்கு இதய நோய் உள்ளது என்ற தவறான எண்ணத்தோடு கவலையுற்று வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து தங்கள் பொருளையும், நேரத்தையும் வீணாக்குகிறார்கள். மேலும் இதய நோய் என்று தெரிந்தவுடனேயே விரைவில் நாம் இறந்துவிடுவோம், எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம் என்று தேவையில்லாத கவலை கொள்கிறார்கள்.

இதய நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றியும், மருந்துகள் உட்கொண்டும், சிறிய அறுவை சிகிச்சை செய்தும் மற்றவர்களைப் போன்று நீண்டநாள் நலமாக வாழலாம் என்பதை மறக்காதீர்கள். 

வேலை செய்யும் போதோ, நடக்கும் போதோ, ஓடும் போதோ, மாடி ஏறும் போதோ இதய படபடப்போ, மார்புவலியோ, மூச்சு வாங்குதலோ ஏற்பட்டாவது இயல்புதான். இவை இதய நோய் இல்லாதவர்களுக்கும் வரலாம். ஆனால் தேவையில்லாத அச்சத்தால் நாம் என்ன செய்கிறோம் அப்படி வரும்பொழுது உடனே குடும்ப மருத்துவரின் ஆலோசனையை நாடுவோம். அவர் சில அடிப்படை டெஸ்டுகளை செய்த பின்னர் இதயத்தில் எந்தவித நோயும் இல்லையென்று கூறினாலும், அதை நம்பாமல் குடும்ப மருத்துவரிடம் ஒரு நல்ல இருதய மருத்துவரிடம் அனுப்பும்படி கேட்டுக் கொள்வோம், அவ்வாறு கேட்டால் குடும்ப மருத்துவரின் மனம் புண்படும் என்று நினைக்கும் சிலர் அவர்க்குத் தெரியாமலேயே ஒரு இதய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவோம். அந்த இதய மருத்துவர் வேறு சில ஸ்பெஷல் டெஸ்டுகளை  எடுத்துப் பார்த்துவிட்டு இதயத்தில் ஏதும் பாதிப்பு இல்லை என்று கூறினாலும் அதையும் நம்பாமல் வேறு ஒரு இதய மருத்துவரின் ஆலோசனையை நாடுவோம், பல இதய மருத்துவர்களின் ஆலோசனைகளை வருடக் கணக்கில் பெற்றுக் கொண்டே இருப்போம்.

இவ்வாறு இல்லாத இதய நோயை இருப்பதாக நினைத்துக் கொள்பவர்களே இதய நோய் இல்லாத இதய நோயாளிகள். இவர்களுக்கு மனநோய் இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு, ஆகையால் மனநல மருத்துவரின் உதவியோடு இவர்களின் ஆழ்மனதில் இருக்கும் இதய நோய் பற்றிய அச்சத்தை அறவே நீக்கிவிட வேண்டும். நீக்காவிட்டால் பல  இன்னல்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். 

இதய நோய் பயம் ஏற்படக் காரணங்கள்:

இதய நோய் இருக்குமோ என்கிற பயம் வருவதற்கான முக்கிய காரணங்கள் நான்கு அவை:

  1. இதய நோய் பற்றிய செய்திகள்.
  2. மாரடைப்பால் திடீரென்று இறந்தவர்கள்பற்றிய செய்திகள்.
  3. மருத்துவர்களின் அறிவுரைகள்.
  4. பரிசோதனை முடிவுகள்.

பத்திரிக்கைகள், ஊடகங்கள், வானொலி என அனைத்திலும் இதய நோய் பற்றிய செய்திகளையும், நோய் அறிகுறிகளையும், நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் பற்றி மாறி மாறிப் பேசி, அனைவரது இதயத்திலும் இந்தப் பயத்தை வர வைத்துவிட்டார்கள். பொதுவாக அவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்றால்; மார்பு வலி, மூச்சிறைத்தல், இதய படபடப்பு, இடது கை வலி, மிகச் சாதாரண வேலைகளைச் செய்தாலும் மிக அதிகமாகச் சோர்வடைவது போன்றவைதான். இந்த உபாதைகள் இதய நோய் இல்லாதவர்களுக்கும் வரக்கூடிய ஒன்று என்பதை இவர்கள் குறிப்பிடுவதில்லை. 

திடீரென்று ஒருவர் இறந்த செய்தியை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. அது நமக்கு நெருங்கியவரோ அல்லது பெயர் மட்டும் தெரிந்த ஒரு நபரோ அவர் திடீரென்று மார்பு வலியால் இறந்திருந்தால் தனக்கு சாதாரணமாக வாயு கோளாறால் லேசாக மார்பு வலி வந்தாலும் உடனே அது இதய நோய் என்று பயப்பட தொடங்கிவிடுகிறோம். அதிலும் இறந்தவர் ஏறக்குறையச் சம வயதினர் என்றால் அந்தப் பயம் மிக அதிகமாகிவிடுகிறது. 

இதய நோய் இல்லாத ஒருவர் இதய நோயாளியாக மாறுவதற்கு சில சமயங்களில் மருத்துவர் அளவுக்கு மீறிய ஈடுபாட்டுடன் வழங்கும் அறிவுரைகளும் காரணமாகி விடுகிறது. உதாரணத்திற்கு ஒருவருக்கு முதன் முதலாக ரத்த அழுத்த நோயோ, சர்க்கரை நோயோ, அதிக கொழுப்பு சத்து நோயோ இருந்தால் மருத்துவர் இதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புண்டு என்று அறிவுரை சொல்லியிருப்பார், ஆனால் நாம் அதை எப்படிப் புரிந்து கொள்கிறோம்? நமக்கு இதய நோய் வந்துவிட்டதாகவே முடிவு செய்து விடுகிறோம். அன்றிலிருந்து இதயம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு உடல் வேதனை ஏற்பட்டாலும் இதய நோய் என்று பயந்து இதய நோய் இல்லாத இதய நோயாளியாக மாறிவிடுகிறோம்.

விவரமில்லாதோர் மார்பு வலியோ, இதய படபடப்போ இருந்தால் தாங்களே ஒரு பரிசோதனை கூடத்தில் ECG எடுத்துக் கொண்டு, அந்த ரிப்போர்ட்டில் இதய நோய் இருப்பது போல் தெரிகிறது என்று அங்கு இருப்பவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே இதய மருத்துவரிடம் அந்த ரிப்போர்ட்டை எடுத்துச் செல்வர், அவர் பரிசோதித்த பிறகு, இதய நோய் அபாயம் எதுவும் இல்லை என்று கூறினால் அதை நம்பாமல் அவர் ஏன் அப்படி எழுதிக் கொடுத்தார் என்று கேள்வி எழுப்புவோம். அதற்கு அவர் உங்கள் உடலைப் பரிசோதனை செய்யாமல் எழுதியது அது, நான் உங்களை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு சொல்கிறேன் என்று பெரிய விளக்கம் கொடுத்த பிறகும்கூட அந்த அச்சம் போகாது. மீண்டும் எப்போதெல்லாம் மார்பு வலிக்கிறதோ அப்போதெல்லாம் ECG எடுத்துக்கொண்டிருப்போம்.

இதய நோய் பயத்தால் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்தக் குடும்பமே அதனால் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்றைய சூழலில், இன்றைக்கு இருக்கும் அறிவியல் வளர்ச்சியில் சாதாரண சிகிச்சை முறையோ அல்லது சிறிய அறுவை சிகிச்சையோ உங்களைச் சரி செய்ய போதுமானது, இதய நோய் என்றாலே விரைவில் மரணம் என்கிற பயத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். ஏனென்றால், இதய நோயே இல்லாத இதய நோயாளியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

டாக்டர் சு. வைத்தியநாதன்
MD (General Medicine), DM (Cardiology)

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இதய இயல் துறைத்தலைவராகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிவில் சர்ஜனாகவும், ஸ்டேன்லி மருத்துவம் கல்லூரியில் இதய நோய் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT