செய்திகள்

ஆபத்தினை விளைவிக்கும் தேயிலை பைகள் 

மாலதி சந்திரசேகரன்

உலகினில் தண்ணீருக்குப் அடுத்தபடியாக மக்கள் அருந்தும் பானம் எது என்று கேட்டால் தேநீர் என்று கூறிவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் மூன்று பில்லியன் டன் அளவு ஒரு வருடத்திற்கு டீத்தூள் உட்கொள்ளப்படுகிறது. டீயில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. அவை பிளாக் டீ, க்ரீன் டீ, ஒயிட் டீ மற்றும் ஊலங் டீ ஆகியவை ஆகும். டீ தயாரிக்கும் பொழுது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப லெமன் டீ , ஜிஞ்சர் டீ, மசாலா டீ , ஐஸ் டீ போன்ற வெரை'டீ’சும் தயார் செய்து அருந்தப் படுகிறது.

சீன நாட்டு அரசர் ஷென் நுங் என்பவருக்கு குடிக்க சுடுநீர் வைத்திருந்த பொழுது அதில் தவறுதலாக சில தேயிலைகள் காற்றில் பறந்து வந்து விழுந்து விட்டதாம். மூலிகை விவரங்களை நன்கு அறிந்திருந்த அந்த அரசர் தேயிலை விழுந்த நீரை அருந்திப் பார்த்தாராம். எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத அந்த மூலிகையின் மணமும் சுவையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இது தான் தேநீர் பிறந்த கதை.

டீ உட்கொள்ளுவது அதிகமாகிப் போனதால், டீ  தயாரிக்கும் முறையும் எளிதாக்கப்பட்டுவிட்டது. தேயிலையைப் போட்டு நீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி  பாலைக் கலந்து தேவைக்கு சர்க்கரையைப் போட்டு அருந்துவது இந்த அவசர யுகத்தில்  மிக நீண்ட செய்முறையாக எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த சோம்பேறித்தனத்திற்கு கை கொடுப்பது போல் டீ பேக்குகள் {tea bags} கடைகளில் கிடைக்கின்றன .

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாறு  இறங்கி தேநீர் தயாராகிறது. இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம். டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இது போன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல் பருமன், இதய நோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல் பிரச்னைகளை உருவாக்கும் டி பைகளைப் பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா? ஆகையால் தேநீர் தயார் செய்வதற்கு சோம்பேறித்தனப்பட்டு தேயிலைப் பைகளை வாங்கி உபயோகம் செய்வதைத் தவிர்க்கவும். அப்படி தேயிலைப் பைகள் உபயோகப் படுத்துவதாக இருந்தால் அவற்றை இனம் கண்டுகொண்டு தவிர்ப்பதே நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT