செய்திகள்

இதய அறை பலவீனம் அடைந்த முதியவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

தினமணி

இதய அறை தசை பலவீனம் அடைந்தும் இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பும் ஏற்பட்ட முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சின்ன காஞ்சிபுரம், அஸ்தகிரி தெருவைச் சேர்ந்த கண்ணாமூர்த்தி (61), தனியார் கேண்டீன் ஊழியர். இவர் பணிக்காக சென்னை வந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஊருக்குச் சென்ற பின்னரும் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் இருந்துள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், இதயத்தில் இரு ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும், ஒரு ரத்தக்குழாயில் முழு அடைப்பு இருந்ததால் இதயத்தின் ஒரு பகுதி தசைகள் பலவீனம் அடைந்து வீக்கமடைந்திருந்தன. இதனால் இதயம் 70 சதவீதம் செயல்பாட்டை இழந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பை-பாஸ் மற்றும் எண்டோ வெண்ட்ரிகுலர் பேட்ச் பிளாஸ்டி (endoventricular circular patch plasty) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து இதய அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் பா.மாரியப்பன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: 
என் தலைமையில் டாக்டர்கள் இளவரசன், கணேஷ் ஆகியோர் கொண்ட குழு சுமார் 3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்தனர். இதயத்தில் தனி அறை போல் ஒன்றை உருவாக்கி, பலவீனம் அடைந்து செயல்படாமல் இருந்த தசைகள் சவ்வு மூலம் தனியாகத் தடுக்கப்பட்டது. 2 ரத்தக் குழாய்களின் அடைப்புகளும் சரி செய்யப்பட்டன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக இங்குதான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை அரசு பொது மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT