முகப்பு
இந்தியா

யார் பெறுவார் அந்த அரியாசனம் - 24: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா?

கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில், வாக்குக் கணிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வாக்குக் கணிப்புகள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகள் தங்களது பலம் எந்த அளவுக்கு இருக்கி

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:57 PM
பகிர்:

கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில், வாக்குக் கணிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வாக்குக் கணிப்புகள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகள் தங்களது பலம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று சுய கணிப்புகளையும் நடத்தி, அந்தக் கணிப்புகளும் கசியத் தொடங்கிவிட்டன.

எல்லா கணிப்புகளும் ஒரு விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லாமல் காணப்படுகின்றன என்பதுதான் வியப்பு. அது என்னவென்றால், காங்கிரஸ ý ம், பாஜகவும் தங்களுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதை ஒத்துக் கொள்வதுடன், இரண்டு கட்சிகளுமே தாங்கள் 200 இடங்களைக்கூடப் பிடிக்கப் போவதில்லை என்பதையும் தயங்காமல் ஒத்துக் கொள்கின்றன.

காங்கிரஸ் கட்சி 169 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும், தனது கூட்டணிக் கட்சிகள் 46 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்திருக்கிறது. அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 205 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தனது பழைய கூட்டணிக் கட்சிகளையும், இடதுசாரிகளையும் மீண்டும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியைப் பொருத்தவரை, தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணி 221 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் மற்றும் திரிணமூல் காங்கிரஸின் ஆதரவால் ஆட்சி அமைப்பது சுலபம் என்றும் பாஜக கருதுகிறது. இந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்பு இவ்வாறு இருந்தாலும், பெருவாரியான வாக்குக் கணிப்புகள் தரும் எண்ணிக்கையே வேறு. காங்கிரஸ் தனது பலத்தை சற்று அதிகரித்து 154 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் 44 இடங்களிலும் வெற்றி பெறும் என்பதுதான், பிரதான தொலைக்காட்சி சானல்களின் கணிப்பு. அதாவது, ஏறக்குறைய 200 இடங்களில் காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்திருக்கிறார்கள். அதேபோல, பாரதிய ஜனதாக் கட்சி தற்போதைய 138 இடங்களைவிட சுமார் 4 இடங்கள் அதிகமாகப் பெற்று 142 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் 41 இடங்களைப் பிடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி 183 இடங்கள்தான் அடுத்த மக்களவையில் பெறும் என்றும் தொலைகாட்சிச் சானல்கள் கணிக்கின்றன. இன்னொரு நிறுவனத்தின் கணிப்பில் இந்த எண்ணிக்கை 205 என்று கணிக்கப்பட்டுள்ளது. கணிப்புகள் துல்லியமான முடிவுகளைத் தெரிவித்து விடாது என்றாலும், ஓரளவுக்கு சில மாற்றங்களை இந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் நான்கு கணிப்புகள் ஒரே குரலில் தெரிவிக்கும் விஷயத்தில் உண்மை இல்லாமல் போகாது. விஞ்ஞான ரீதியான கணிப்புகளில் ஏறத்தாழ மக்களின் சிந்தனை ஓட்டத்தைக் கணித்துவிட முடியும் என்பதை ஒத்துக் கொண்டே தீர வேண்டும். அந்த கணிப்புகளில் சில... கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி சுமார் 15 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிக் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணி சுமார் 28 இடங்களில் வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்ற திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களையும், 6 இடங்களில் வென்ற காங்கிரஸ் 5 இடங்களையும், இடதுசாரிகள் வெறும் 24 இடங்களையும்தான் பெறுவார்கள். பிகாரில் நிதீஷ்குமார் அலையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணி அடித்து ஒதுக்கப்படுவார்கள். தில்லியில் காங்கிரஸ் அலை. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரசும் தங்களது பலத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பெரிய அளவில் வெற்றி பெறப் போவதில்லை.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜகவும், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ ý ம் தங்களது பலத்தை அதிகரிக்கின்றன.

இப்படிப் பல்வேறு மாநிலங்களிலான கணிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. ஆந்திரத்தில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகவும், தெலுங்கு தேசம் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று ஒரு கணிப்பும், இல்லை, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், தெலங்கானா ராஷ்டிர சமிதியும் 20 இடங்களில் வெற்றி பெறும் என்றும், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் மூன்று இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் சில கணிப்பு கூறுகின்றன.

ஒரிசாவில் சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறும் பிஜு ஜனதா தளம், மக்களவைத் தேர்தலில் பல இடங்களைக் காங்கிரஸ ý க்கு இழந்து விடும் என்கிறது வேறொரு வாக்குக் கணிப்பு.

இப்படிப் பல கணிப்புகள் வந்தாலும், ஒரு விஷயம் தெளிவாகவே தெரிகிறது. காங்கிரஸ ý ம் சரி, பாஜகவும் சரி, தங்களது கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறப் போவதில்லை என்பதை உணர்ந்து விட்டிருக்கின்றன என்பதுதான் அது. கடைசிக் கட்டத் தேர்தல் முடிவதற்கு முன்பே, எதிரணியிலுள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ ý ம், பாஜகவும் வலைவீசத் தொடங்கிவிட்டன. இடதுசாரிகள் கூடத் தங்களது காங்கிரஸ் எதிர்ப்பில் கடுமையைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைத்துத் தீர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதும், அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது என்பதும் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே நன்றாகத் தெரியும்.

இப்படியொரு சூழ்நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனிப்பெரும் கூட்டணியாகவும் அடுத்த மக்களவையில் அமையுமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியுமா என்பதுதான் இப்போது எழும் மிகப் பெரிய கேள்வி.

1996-ல் பாரதிய ஜனதாக் கட்சி சந்தித்த அதே தர்ம சங்கடத்தைக் காங்கிரஸ் இந்த முறை எதிர்கொள்ள நேரிடும் என்கிற யதார்த்தத்தை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. திமுகவை உதறிவிட்டு அதிக இடங்களைப் பெற இருக்கும் அதிமுகவின் உதவியைப் பெறுவது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பை தனது மாநில அரசியலில் எதிர்கொள்ளும் தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளை தனது அணிக்குக் காங்கிரஸ ô ல் இழுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

தனது 200க்கும் சற்று அதிகமான கூட்டணி எண்ணிக்கையை, பல புதிய கட்சிகளின் ஆதரவுடன் அதிகரித்தாலும் கூட இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காமல் தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம். அப்படியே இடதுசாரிகளின் ஆதரவால் பெரும்பான்மை கிடைத்தால், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையாகி விடும். தனது தலைமையில் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், மூன்றாவது அணியை ஆதரிப்பதில்லை என்கிற தீர்மானத்திற்குக் காங்கிரஸ் வந்து விட்டதாகவும் தெரிகிறது. கமல்நாத் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தியும் விட்டனர். இதற்கு நேர்மாறாக, பாஜகவின் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால், தனிப்பெரும் கட்சி என்று எடுத்துக் கொண்டாலும், கூட்டணி என்று எடுத்துக் கொண்டாலும் தனிப்பெரும்பான்மை அணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தாக வேண்டும். அப்படி அழைத்தால் நிலைமையில் மாற்றம் ஏற்படுமா?

~ தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.