திருப்பதி, அக். 19: திருப்பதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் குளம் மிகவும் பாழ்பட்டுக் கிடக்கிறது.
திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் கோவிந்தராஜ பெருமாள். இவருக்காக திருப்பதில் அமைந்துள்ளதுதான் கோவிந்தராஜ சுவாமி கோவில்.
இக்கோவிலுக்கும் கோவில் முன் அமைந்துள்ள குளத்துக்கும், பல நூற்றாண்டு வரலாற்று சிறப்பு உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கும் வந்து செல்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தெப்ப உற்சவ விழா 5 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
உற்சவ விழாவின்போது குளத்தை சுத்தம் செய்து, லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி குளத்தில் சுவாமியின் உற்சவ விழா நடக்கும். மற்ற நாட்களில் இக்குளம் வறண்டு, செடிகள் வளர்ந்து கவனிப்பாரற்று கிடக்கும். வரலாற்று சிறப்புமிக்க இக்குளம் வறண்டு கிடப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேதனை அளிக்கிறது.
கோவிலைச் சுற்றி உணவு விடுதிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், 500, 600 அடி வரை ஆழ்துழை கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது போன்ற பல காரணங்களால் குளத்துக்கு வரும் நீர் தடைப்பட்டது. மேலும் மழை காலங்களில் மலைகளின் மேலிருந்து பீம தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களிலிருந்து இக்குளத்திற்கு தண்ணீர் வருகின்ற பாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக்கொண்டதால் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.
இந்நிலையில் குளம் வறண்டு கவனிப்பாரற்று கிடப்பதால் இரவு நேரங்களில் விரும்பதகாத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே திருமலை திருப்பதி நிர்வாகம் குளத்தை தூர்வாரி சீர்படுத்தி எப்போதும் பயன்பாட்டில் இருக்க செய்ய வேண்டுமென்பதே பக்தர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.