முகப்பு
இந்தியா

செயலிழந்த நிலையில் காங்கிரஸ் தலைமை!

புது தில்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவரை நியமித்தது மட்டும்தான் சமீப காலத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுத்த உருப்படியான ஒரே நடவடிக்கை என்று கூறிச் சிரிக்கிறது தலைநகரப் பத்திரிகையாளர் வட

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:10 PM
பகிர்:

புது தில்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவரை நியமித்தது மட்டும்தான் சமீப காலத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுத்த உருப்படியான ஒரே நடவடிக்கை என்று கூறிச் சிரிக்கிறது தலைநகரப் பத்திரிகையாளர் வட்டாரம்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாதின் செல்வாக்குக் குறைந்து வருவதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நியமனம் எடுத்துக்காட்டு என்றும் சொல்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருக்கும் குலாம் நபி ஆசாத் சென்னை விமான நிலையத்தில் ""தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார்'' என்று அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தில்லியிலிருந்து புதிய தலைவராக ஞானதேசிகனைக் காங்கிரஸ் மேலிடம் அறிவித்திருப்பதுதான் இதற்குக் காரணம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை நியமிப்பதற்கே இத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், ஏனைய மாற்றங்கள் சீக்கிரத்தில் நடந்து விடாது என்பதில் சந்தேகம் இல்லை. எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமல் கட்சி ஸ்தம்பித்திருக்கிறது என்பதுதான் மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக, கட்சித் தலைவி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது முதலே, கட்சி செயலிழந்து காணப்படுவதாக முக்கியத் தலைவர்களே வருந்துகிறார்கள்.

மிகவும் முக்கியமான சிலர் மட்டுமே கட்சித் தலைவி சோனியா காந்தியை சந்திக்க முடிகிறது. ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத் தேர்தலில் முழு மூச்சாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் முடிவெடுக்கும் நிலையில் எந்த மூத்த தலைவரும் இல்லை என்பதுதான் காங்கிரஸ் மேலிடம் இப்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை.

கடந்த சில மாதங்களாகவே, காங்கிரஸ் முதல்வர்களில் ஐந்து பேர், அவரவர் மாநிலத்தில் வேலையைக் கவனிக்காமல் தில்லியில்தான் மாதத்தில் பெரும்பாலான நாள்களைக் கழிக்கிறார்கள். தாங்கள் வேலையை கவனிப்பதிலும், மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதிலும் முனைப்புக் காட்டினால், தில்லியில் தங்களுக்கு எதிராகத் தலைமையிடம் எதிர் கோஷ்டியினர் போட்டுக் கொடுத்து முதல்வர் பதவிக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்கிற பயம்தான் அதற்குக் காரணம்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண், கோவா முதல்வர் திகம்பர் காமத், ஹரியாணா முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா மற்றும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகிய ஐந்து பேரும் கையோடு தங்கள் முதல்வர் நாற்காலியையும் தூக்கிக் கொண்டு தில்லிக்கு வராத குறை.

ராகுல் காந்தியின் அதிருப்தியை முழுமையாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் என்று கூறப்படுகிறது. 1984-ல் ராஜீவ் காந்தியின் இளைஞர் படை என்று வர்ணிக்கப்பட்ட, ராஜேஷ் பைலட், மாதவ்ராவ் சிந்தியா, அசோக் கெலாட், தருண் கோகோய், கமல்நாத், ஜகதீஷ் டைட்லர் ஆகிய ஆறு பேர்களில் ஒருவராகத் திகழ்ந்த அசோக் கெலாட் அப்போது நிர்வாகத் திறமைக்காக மெச்சப்பட்டவர். இப்போது, ராகுல் காந்தியால் திறமையின்மைக்காக வெறுக்கப்படும் நபரும் இவர்தான்.

அசோக் கெலாட்டின் தலைமையில் இரண்டாவதாக அமைந்த ஆட்சியில் நிர்வாக ரீதியாகப் பல குறைபாடுகள் இருப்பது என்னவோ உண்மை. குறிப்பாக, ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையால், தனது உத்தரப்பிரதேச எதிர்பார்ப்புக்குக் குந்தகம் விளைவித்துவிட்டதாக ராகுல் காந்தி கருதுவது அசோக் கெலாட்டின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

பிருதிவிராஜ் சவாணின் பாடு அதைவிட மோசம். மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்த்துக்கு ஆசைப்பட்டவரை மகாராஷ்டிர முதல்வராக அறிவித்த நாள் முதலே கரையில் எடுத்துப் போடப்பட்ட மீனாகத் தவிக்கிறார் அவர் என்று கூறுகிறார்கள். மீண்டும் மகாராஷ்டிர முதல்வர் பதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கும் முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் அரசியல் நீக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், முதல்வர் பதவியைப் பாதுகாத்தால் போதும் என்று தில்லிக்கே குடியேறிவிட்ட நிலைமையில் இருக்கிறார் முதல்வர் சவாண்.

ஹரியாணா முதல்வர் பூபேந்திர சிங் ஹுடாவும் சரி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் சரி, கட்சித் தலைவியை சந்திக்க நேரம் கேட்டு அலையோ அலை என்று அலைந்ததுதான் மிச்சம். ஹரியாணா முதல்வருக்கு தில்லி வருவது என்பது புழைக்கடைக்குப் போய் விட்டு வருவது போல. ஆந்திர முதல்வருக்கு அப்படியா? அப்படியே தில்லிக்கு வந்தால், ஹைதராபாத்தில் ஏதாவது குழப்பத்தை உண்டு பண்ணி விடுகிறார்களாம். ஏன் முதல்வரானோம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறாராம் முதல்வர் கிரண்குமார் ரெட்டி.

ஐந்து பேரில் சற்று ரிலாக்ஸாக இருப்பது கோவா முதல்வர் திகம்பர் காமத்தான். தேர்தலுக்கு மூன்றே மாதம்தான் இருக்கிறது என்பதால் தன்னை மாற்றிவிட மாட்டார்கள் என்கிற அதீத நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஆனால், கோவா மாநிலத்தின் சுரங்கங்களில் பாதிக்கு மேல் அனுமதி பெறாமல் வெட்டி எடுக்கப்படுபவை என்கிற செய்தி மேலும் வலுவடைந்து நீதிமன்றம் தன்னை ராஜிநாமா செய்ய வைத்து விடுமோ என்கிற பயம்தான் அவருக்கு.

தான் உண்டு, தனது வேலை உண்டு என்று ஈடா நகரில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்த அருணாசலப் பிரதேச முதல்வர் ஜர்பம் காம்ப்ளினை, தில்லிக்கு வந்து முகாமிட்டு எதிர் கோஷ்டியினர் கவிழ்த்துப் புது முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து, ஏனைய காங்கிரஸ் முதல்வர்களுக்குத் தூக்கத்தில்கூட பதவி பறிபோவதாகத் தான் கனவு வரும் என்கிற நிலைமை.

இவ்வளவெல்லாம் நடக்கிறதே, காங்கிரஸ் மேலிடம் என்ன செய்கிறது? என்ன செய்யப் போகிறது? முதல்வர்களை மாற்றப் போகிறதா இல்லை மெüனம் சாதிக்கப் போகிறதா?

மணீஷ் திவாரி, மணீஷ் திவாரி என்றொரு நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைத் தொடர்பாளர். இவரிடம் போய், "காங்கிரஸ் ஏன் செயலிழந்த நிலையில் இருக்கிறது?' என்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

""நீங்கள் மதராசிதானே? உங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே? இதிலிருந்தே தெரிய வேண்டாமா, காங்கிரஸ் செயலிழந்து விடவில்லை. மேலிடம் எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ, அப்போது செய்யும் என்று? இந்தியாவிலேயே சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்!'' என்று சொல்லிக் கட்சித் தலைமைக்கு வக்காலத்து வாங்கிவிட்டார்.

நம் ஊர் அமைச்சர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் "பதவி

எப்போது பறிபோகும்' என்பது தெரியாமல்தான் முதல்வர்களே இருக்கிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.