முகப்பு
இந்தியா

இலங்கை செல்லும் இந்தியக் குழுவால் பயனில்லை: டி. ராஜா

புது தில்லி, ஏப்.16: இலங்கை செல்லும் இந்திய எம்.பிக்கள் குழுவால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.  இலங்கையில் போரினால் பாதிக்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

புது தில்லி, ஏப்.16: இலங்கை செல்லும் இந்திய எம்.பிக்கள் குழுவால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து ஆராய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 13 எம்.பி.க்கள் கொண்ட குழு திங்கள்கிழமை இலங்கை புறப்பட்டுச் சென்றது. இக்குழுவினர் ஏப்ரல் 21ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

 இந்நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இக்குழுவின் பயணத்தால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று டி. ராஜா தெரிவித்தார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது:

 "இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் குழுவை அந்நாட்டுக்கு அனுப்பி வைப்போம்' என்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கூறினர். ஆனால், தற்போது செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தமிழர்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டு செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் எம்.பி.க்கள் இடம் பெறாமல் போனது ஏன்?

 தமிழகத்தில் ஆட்சிபுரியும் அதிமுகவும், முக்கிய கட்சியான திமுகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட தமிழர்கள் நலனில் உள்ள கட்சி எம்.பி.களும் இடம்பெறவில்லை.

 மேலும், தற்போது இலங்கை சென்றுள்ள குழுவானது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களது உண்மையை நிலையை முழுமையாக அறியுமா என்பது தெரியவில்லை.

 அந்நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவக் கருவிகள் வழங்குவது, வீட்டுவசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளைத் தருவது, சைக்கிள்களை அளிப்பது போன்றவற்றுக்காக இக்குழு செல்வதுபோல் தெரிகிறது. எம்.பி.க்கள் குழு பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பதுகூட சந்தேகமே. காரணம், இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் பகுதிகளுக்கு மட்டுமேதான் இக் குழுவினர் செல்ல முடியும்.

 ஆகவே, இக்குழு இலங்கை அரசுடனான இந்திய அரசின் நல்லெண்ணக் குழுவாகத்தான் இருக்குமே ஒழிய, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து ஆராயவோ, அவர்களுக்கான அரசியல் தீர்வுக்கு உதவுமா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்தக் குழுவால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே என்றார் அவர்.

 "இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்வோம்' என்று இலங்கைக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.