முகப்பு
இந்தியா

ஐஏஎஸ் பிரதான தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்படுவது எப்போது?

புது தில்லி, ஆக. 2: ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பிரதான (மெயின் எக்ஸாம்) தேர்வுக்கு சென்னையில் நடத்தப்படும் தமிழக அரசின் இலவச பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. அதன் காரணமாக, தில்லிக்கு வந்து பயிற்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:21 PM
பகிர்:

புது தில்லி, ஆக. 2: ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பிரதான (மெயின் எக்ஸாம்) தேர்வுக்கு சென்னையில் நடத்தப்படும் தமிழக அரசின் இலவச பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை.

அதன் காரணமாக, தில்லிக்கு வந்து பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் (பிரலிமினரி எக்ஸாம்) தேர்ச்சி பெற்ற தமிழக கிராமப்புற மாணவர்கள், தமிழக அரசின் இலவச பயிற்சி பெறுவதற்கு சென்னை வர முடியாமல் தில்லியிலேயே காத்திருக்கின்றனர்.

இந்தியக் குடிமைப் பணியில் சேர்வதற்கான தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய சென்னை அண்ணா நகரில் தமிழக அரசு பயிற்சி அளித்து வந்தது. ஆனால், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வுக்கான பயிற்சி அங்கு இன்னும் தொடங்கப்படவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழக கிராமப்புற மாணவர்கள் பலர், தில்லிக்கு வந்து இங்குள்ள மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதுவது வழக்கம்.

அவ்வாறு, முதல்நிலைத் தேர்வை முடித்த பலர், அதற்கு அடுத்த நிலையான பிரதான தேர்வுக்காக சென்னைக்கு சென்று அங்கேயே தங்கி, தமிழக அரசு நடத்தும் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி பெறுவர்.

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் மூலம் அங்கு பயிற்சி அளிக்கப்படும் என்பதும், அரசு மையம் என்பதால் இலவசப் பயிற்சியுடன், தங்குமிடமும் இலவசம் என்பதும் அதற்கு முக்கிய காரணங்

களாகும்.

தமிழகத்திலிருந்து 630 பேர் தேர்வு: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் இருந்து 4.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதில் 13,092 பேர் தகுதி பெற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 27,000 பேர் முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 630 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதையடுத்து, அவர்கள் பிரதான தேர்வுக்காக தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

இது குறித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லிக்கு வந்து பயிற்சி பெற்று முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தில்லியில் உள்ள பயிற்சி மையங்களில் படித்தோம்.

இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 630 பேரில் பெரும்பாலானோர் தில்லியில் பயின்றவர்கள்.

வழக்கமாக, தேர்வு முடிவு வெளியான ஒரிரு தினங்களில் சென்னை அண்ணா நகரில் தமிழக அரசால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துவிடும்.

இந்த ஆண்டு பயிற்சி எப்போது தொடங்கப்படும் என்று சென்னைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டால் அதிகாரிகளிடம் பதில் இல்லை.

தில்லியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பரமக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அரசு பயிற்சி எப்போது தொடங்கப்படும் என்று தெரியாமல் சென்னைக்குச் சென்று தங்கினால் அதிகமான வாடகை செலுத்த நேரிடும்.

இதனால் சென்னைக்கும் செல்ல முடியாமல், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தில்லியிலேயே தங்கி இருக்கிறோம்.

வழக்கமாக நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் பிரதான தேர்வு, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதியே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

தேர்வுக்கு எங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்கான பயிற்சிக் காலம் இந்த முறை குறைந்துவிட்டது.

தேர்வுக்காக ஏராளமான படிக்க வேண்டியுள்ளது. மாதிரித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பயிற்சியை தொடங்க வேண்டும்' என்று தமிழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.