பிரணாபின் தேர்வும் சோனியாவின் வியூகமும்!
குடியரசுத் தலைவர் பதவிக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு விட்டார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய ஐக்கிய முற்போக்குக் கூட்டண
குடியரசுத் தலைவர் பதவிக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு விட்டார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில், அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அநேகமாக முடிவான ஒன்றாகத்தான் தோன்றுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிக்கமாட்டார்கள் என்ற நிலையில் இடதுசாரிகளும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும். 2007-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே இடதுசாரிக் கட்சிகள் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தக் காங்கிரஸிடம் ஒப்புதல் அளித்திருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ÷சோனியா காந்தியின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அல்ல பிரணாப் முகர்ஜி என்றும், அவரை முன்மொழிவது போல பாவனை செய்து கடைசியில் கடந்த முறை பிரதிபா பாட்டீலை முன்மொழிந்தது போலப் புதிதாக ஒரு வேட்பாளரைக் காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தக் கூடும் என்றும் கூறப்பட்ட ஹேஷ்யங்களும், எதிர்பார்ப்புகளும் பொய்த்துவிட்டன.
திடீர் திருப்பமாகவும், அவசர அவசரமாகவும் பிரணாப் முகர்ஜியைக் காங்கிரஸ் தனது வேட்பாளராக அறிவித்ததற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரைத் தனது விருப்ப வேட்பாளராக மம்தா பானர்ஜி அறிவித்தது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்ததுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜவாதி கட்சியால் பரிந்துரைக்கப்பட்டவர் அப்துல் கலாம் என்பதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதிமுக, பிஜு ஜனதாதளம் போன்ற கட்சிகளும் அப்துல் கலாமை ஆதரிக்கக்கூடும் என்பதும் காங்கிரஸ் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி விட்டது.
தொலைக்காட்சிச் சேனல்களும் அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவைப் பெருக்கும் செயலில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் உடனடியாகத் தனது வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.
காலதாமதம் மக்கள் மத்தியில் அப்துல் கலாமுக்கான ஆதரவை அதிகரிக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதாகவும் அது அமைந்துவிடும் என்கிற பயம் காங்கிரûஸப் பிடித்துக் கொண்டது.
2014 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழலில், அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருப்பதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாததுதான் அதற்குக் காரணம்.
மத்திய அமைச்சரவையிலிருந்து பிரணாப் முகர்ஜி விலகுவதும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை முன்னவர் பதவியிலிருந்து விலகுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கப் போகிறது என்பது பல்வேறு அரசியல் நோக்கர்களாலும், மூத்த காங்கிரஸ் தலைவர்களாலும் சுட்டிக் காட்டப்படுகிறது.
""நிதியமைச்சர் பதவியில் பிரணாப் முகர்ஜி இல்லாமல் இருப்பதைக்கூட சமாளித்து விடலாம். ஆனால், அவை முன்னவராக இருந்து அன்றாட நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சிக்கல் இல்லாமல் இனிமேல் நடத்தப் போவது யார் என்பதுதான் காங்கிரஸ் கட்சி சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
எதிர்க்கட்சிகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கும் பிரணாப் மட்டும்தான் இன்றைய அமைச்சரவையில் அனுபவசாலியாகவும், அனைத்து உறுப்பினர்களின் மரியாதைக்குரிய தலைவராகவும் கருதப்படுகிறார். எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்பும் போதெல்லாம் அவர்களுடன் சமரசம் பேசுவது பிரணாப்தான். அவர் இல்லாமல் காங்கிரஸ் இனி வரும் நாடாளுமன்றக் கூட்டங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது முக்கியமான கேள்வி'' என்று கருத்துத் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சதீஷ் மிஸ்ரா.
இன்றைய மத்திய அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜியின் அனுபவத்துக்கு ஈடாக வேறு யாரையும் குறிப்பிட முடியாது. அவை நடவடிக்கைகளைச் சமாளிக்கும் திறன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.
பிரணாப் முகர்ஜி இல்லாத நிலையில் மூத்த அமைச்சர்கள் என்று எடுத்துக் கொண்டால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் போன்றவர்களைத்தான் குறிப்பிட வேண்டும்.
கபில் சிபல், சல்மான் குர்ஷித், வயலார் ரவி, ஆனந்த் சர்மா போன்றவர்கள் அவையை நடத்தும் அளவுக்குத் திறமைசாலிகளோ, அனுபவசாலிகளோ அல்லர். அவைத் தலைவராக இருப்பவர் சரளமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத் தெரிந்தவராகவும் எதிர்க்கட்சியினரின் மரியாதைக்குரியவராகவும் இருந்தால் மட்டுமே, பிரச்னைகளையும், கூச்சல் குழப்பங்களையும், கருத்து வேறுபாடுகளையும் சமாளிக்க முடியும். இந்த வகையில் பார்த்தால் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, எஸ்.எம். கிருஷ்ணா மூன்று பேருமே அதற்கான தகுதி உடையவர்களாக இல்லை.
இவ்வளவு தெரிந்திருந்தும் பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவிக்க முன்வந்தது ஏன்? பிரணாப் முகர்ஜியைப் பிரதமராக்கிவிட்டு, மன்மோகன் சிங்கைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்திருக்கலாமே என்கிற கேள்வி காங்கிரஸ் கட்சி வட்டாரங்களிலேயே எழுப்பப்படுகிறது.
பிரணாப் பிரதமராவதை நேரு குடும்பம் விரும்பாததுதான் அதற்குக் காரணம் என்பதைவிட, வருங்கால சூழலை முன்னிட்டுத்தான் இப்படி ஒரு முடிவைக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எடுத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
2014 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் பெறுவது சாத்தியமில்லை என்று புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் பலம் 150 இடங்களைத் தாண்டுவதுகூட சாத்தியமில்லை என்கிறது அந்த அறிக்கை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தாற்போல அமையப் போவது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசா அல்லது காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவுடன் அமையும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலை 2014-ல் ஏற்படுமேயானால் அப்போது காங்கிரஸ் கட்சியின் நலனையும், நேரு குடும்பத்தின் நலனையும் பாதுகாக்கும் திறமையுள்ள ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்திருக்க வேண்டியது அவசியம் என்று சோனியா காந்தி கருதுவதால்தான், பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக அவர் அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளவும், நேரு குடும்பத்தின் நலனைப் பாதுகாக்கவும் மன்மோகன் சிங்கைவிட அரசியல் அனுபவசாலியான பிரணாப் முகர்ஜிதான் சிறந்தவர் என்று சோனியா கருதுவதில் வியப்பொன்றும் இல்லை.
கடந்த 15 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகப் பிரணாப் மாறிவிட்டிருக்கிறார் என்றும், அதனால்தான் முக்கியமான பொறுப்புகள் அவரிடம் தரப்பட்டன என்றும் விளக்கம் தருகிறார்கள் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
இந்தியாவின் முதல் குடிமகனாக்கித் தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவின் முதல் குடும்பத்துக்குப் பாதுகாப்பாக பிரணாப் முகர்ஜி செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பில்தான் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.