இந்தியா

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: பிரதமர் மன்மோகன் சிங் மௌனம்

தினமணி

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிப்ரவரி 21-ம் தேதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவை, மாநிலங்களவையில் கடந்த சில நாள்களாக விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதில் அளித்து மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

""இலங்கைத் தமிழர்களின் நிலை மீது மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல் தீர்வுதான் ஒரே வழி. இது தொடர்பாக அந்த நாட்டில் உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு சமஉரிமை, சுயமதிப்பு, மரியாதை கிடைப்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும்'' என்றார்.

ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதுவும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் அவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் இனமோதலுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதாக இலங்கை அரசு, இந்தியத் தலைவர்களுக்கு உறுதியளித்தும் அதை முறையாகச் செயல்படுத்தத் தவறிவிட்டது. இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மன்மோகன் கவலை வெளியிட்ட போதிலும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்.

இந்நிலையில் அவையில் இருந்த மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா, மாநிலங்களவை அதிமுக தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், ""இலங்கைத் தமிழர் நிலைமை தொடர்பான உங்கள் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை; அரசியல் தீர்வுக்காகக் கவலை கொள்ளும் மத்திய அரசு, முதலில் இலங்கை போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்காகத்தான் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த நிலையும் எடுக்காதது ஏன்? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் அக்கறை காட்டவில்லை'' என்று கூறினர்.

அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, ""பிரதமர் பேசும்போது உறுப்பினர்கள் இவ்வாறு குறுக்கிடுவது அவை விதிகளுக்கு எதிரானது'' என்று கூறினார்.

ஆனால், அதை பொருட்படுத்தாமல் திருச்சி சிவா, ""பிரதமர் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்; அவர் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்'' என்று குரல் கொடுத்தார். அதிமுக, இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் இதே போல குரல் கொடுத்தனர். இதன் காரணமாக மாநிலங்களவையில் சில நிமிடங்கள் அமளி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT