முகப்பு
இந்தியா

மே 16 வரை பட்ஜெட் கூட்டத் தொடர்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே 16-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:36 AM
பகிர்:

சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே 16-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு வியாழக்கிழமை விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டப் பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பு:

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வரும் வியாழக்கிழமை (மார்ச் 28) நிறைவடைகிறது. அன்றைய தினம் பேரவையில் சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

மானியக் கோரிக்கைகள்: ஏப்ரல் 1-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. முதல் நாளில் உள்ளாட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முதல்வரின் துறையான உள்துறை மீது ஏப்ரல் 22-ம் தேதி முதல் இரண்டு நாள்கள் விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு உள்துறைக்கு பொறுப்பு

வகிப்பவரும், முதல்வருமான ஜெயலலிதா பதில் அளிக்கிறார். மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 25-ம் தேதியும், போக்குவரத்துத் துறை மீதான விவாதம் மே 3-ம் தேதியும் நடைபெறுகின்றன.

பள்ளிக் கல்வித் துறை மீது விவாதம் மே 10-ம் தேதியும், வருவாய்த் துறை மீது மே 13-ம் தேதியும் விவாதம் நடைபெற்று அவை நிறைவேற்றப்படுகின்றன. இதேபோன்று,  பிற துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் மே 16-ம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.