முகப்பு
இந்தியா

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்கள்

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை கூறியுள்ளார்.

Updated On : 13 மே 2013, 1:15 am IST
பகிர்:

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த செவிலியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை கூறியுள்ளார்.

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 செவிலியர்களுக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: பொது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களுக்கு செல்வது பாரம்பரியமாக உள்ளது. இதையும் தாண்டி செவிலியர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. குறிப்பாக, மருத்துவர்கள் இல்லாத கிராமப்புறங்களில், சுகாதார வசதியை மேம்படுத்துவதற்கு திறமையான செவிலியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசின் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம், வரும் காலத்தில் செவிலியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், அவர்களுக்கு கூடுதல் பொறுப்புடன் கூடிய அதிகாரம் வழங்கப்படும் என்றார் முகர்ஜி.

Advertisement

Advertisement

12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் "அனைவருக்கும் சுகாதார வசதி'யை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, மருத்து கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும். அப்போது, செவிலியர்களுக்கான தேவை அதிகரிக்கும். இந்தத் தேவைக்கேற்ப செவிலியர் கல்லூரிகளும் புதிதாக தொடங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள், பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றும், அவற்றில் 6 செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். இதுதவிர, சென்னையில் இந்திய செவிலியர் கல்வி நிறுவனம் நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக 20 ஆயிரம் செவிலியர் படிப்புக்கான இடங்கள் தோற்றுவிக்கப்படும். கடந்த 7 ஆண்டுகளில் செவிலியர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் ஆசாத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி வடிவேல், ஜெயசீலன் எம். தேவதாசன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கே.கண்ணம்மாள் ஆகியோர் நைட்டிங்கேல் விருது பெற்றவர்களில் அடங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.