முகப்பு
இந்தியா

விடைத்தேர்தலா? கடைத்தேற்றமா?

தெலங்கானாவில் ஒரு மக்களவைத் தொகுதியிலும் (மேடக்), ஆந்திரத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் (நந்திகமா) மட்டுமே நடைபெறுகிறது என்பதால், இன்று நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்கள் தென்னிந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லையே தவிர, கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்குப் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இடைத்தேர்தல்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தெலங்கானாவில் ஒரு மக்களவைத் தொகுதியிலும் (மேடக்), ஆந்திரத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் (நந்திகமா) மட்டுமே நடைபெறுகிறது என்பதால், இன்று நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்கள் தென்னிந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லையே தவிர, கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்குப் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இடைத்தேர்தல்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

ஒன்பது மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று நடைபெற இருக்கும் வாக்குப்பதிவின் முடிவுகள், வரும் 16ஆம் தேதி வெளியாகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்ததினம் என்பதால், இந்த இடைத்தேர்தல் வெற்றியை அவருக்குப் பிறந்தநாள் பரிசாக அளிக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி முனைப்பாகவே இருக்கிறது.

இன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை, உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் இருப்பது, இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தவரை, அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும்தான் உயர்ந்து நிற்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தந்த அமித் ஷாவால் இடைத்தேர்தல்களிலும் அந்த அலையை நிலைநிறுத்த முடிந்தால் மட்டுமே, அவரது குறிக்கோளான 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியை உத்தரப்பிரதேசத்தில் நிறுவ முடியும்.

உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளும், முலாயம் சிங் யாதவ் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ராஜிநாமா செய்த மைன்புரி மக்களவைத் தொகுதியும் இடைத்தேர்தலை எதிர்கொள்கின்றன. பா.ஜ.க.வுக்கு வெற்றி எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட சமாஜவாதி கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி அவசியம். இப்போதே முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிரான கருத்துகள் கட்சியில் எழத்தொடங்கி விட்டன. மக்களவைத் தேர்தலில் ஆளும் சமாஜவாதி கட்சி அடைந்த பின்னடைவைச் சமன் செய்ய பெரும்பாலான இடைத்தேர்தல் தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். இதிலும் தோல்வியைத் தழுவினால், கட்சியின் செல்வாக்குச் சரிவு உறுதிப்படுத்தப்பட்டு, 2017வரை ஆட்சியில் தொடர முடியுமா என்பதே கூட கேள்விக்குறியாகிவிடும்.

சஹாரன்பூர் நகர், நொய்டா, தாக்குர் துவாரா, பிஜ்னோர், நிகாசன், பல்ஹா, சிராது, ரோஹனியாத் ஹமீர்பூர், சர்க்காரி, லக்னௌ கிழக்கு ஆகிய 11 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவினர் ராஜிநாமா செய்த தொகுதிகள். மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை வென்ற பா.ஜ.க., தன்னிடமிருந்த இந்த 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றை இழந்தாலும்கூட அது சறுக்கலாகத்தான் கருதப்படும்.

பா.ஜ.க., சமாஜவாதி கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிர்ணயிப்பதாக இருக்கக்கூடும். உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியான "சமார்' எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள், பா.ஜ.க. ஆதரவாளர்களாக மாறியதுதான் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கக் காரணம். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் போனால், மாயாவதியும் அவரது கட்சியும் அரசியல் சக்தியாகத் தொடர்வதேகூட கடினம்.

இணைந்து செயல்பட்டு, பா.ஜ.கவை வீழ்த்த முலாயம் சிங் யாதவ் நீட்டிய நேசக்கரத்தை மறுதலித்து, இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. இதுவேகூட, பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடக் கூடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. ""மாயாவதி ஏன் இப்படி ஒரு தற்கொலை முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை'' என்று அவரது கட்சியினரே முணுமுணுக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தைப் போலவே, இந்த இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெறும் மற்றொரு மாநிலம் குஜராத். வாராணசி மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால் உத்தரப்பிரதேசம் பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமாகக் கருதப்பட்டாலும், குஜராத் மாநிலம்தான் அவரது அடித்தளம்.

மக்களவைத் தேர்தலில் 5.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்று, வாராணசி தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு ராஜிநாமா செய்திருக்கும் வதோதரா மக்களவைத் தொகுதி இன்று இடைத்தேர்தலை சந்திக்கிறது. மாநகராட்சித் துணை மேயர் ரஞ்சன்பென் பட், பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல, நரேந்திர மோடி ராஜிநாமா செய்த அவரது சட்டப்பேரவைத் தொகுதியான மணிநகரும் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது.

வதோதரா மக்களவைத் தொகுதி அல்லாமல், குஜராத்தில் மணிநகர், தீசா, தங்காரா, கம்பாலியா, மங்க்ரோல், தலஜா, ஆனந்த், மட்டர், லிம்கேடா சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரு மக்களவைத் தொகுதியும், 9 சட்டப்பேரவைத் தொகுதிகளும் பா.ஜ.க.வின் மக்களவைத் தேர்தல் வெற்றியைப் போலவே தீர்ப்பளிக்கும் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பு.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோடியின் பிரசாரம் இல்லாமல், அவரது தலைமை இல்லாமல் குஜராத்தில் நடைபெறும் தேர்தல் என்பது மட்டுமல்லாமல், ஆனந்தி பென் படேல் முதல்வரான பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அதனால்தான், ஆனந்திபென் படேல் இந்தத் தொகுதிகளில் புயலாகச் சுற்றிவந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இன்றைய வாக்குப்பதிவில் கூர்ந்து கவனிக்கப்படும் இன்னொரு மாநிலம் மேற்கு வங்கம். செüரங்கியிலும், தட்சிண பஸீர்ஹாட்டிலும் நடைபெறும் இடைத்தேர்தல்கள், மம்தா பானர்ஜியின் செல்வாக்குச் சரிவை எடுத்துரைக்கும் என்பதைவிட, பா.ஜ.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் என்பதால் முன்னுரிமை பெறுகின்றன. இதுவரை இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் என்றும் மூன்றாவது கட்சியாக காங்கிரஸýம் இருந்துவந்த மேற்கு வங்கத்தில், பா.ஜ.க.வின் "திடீர்' வளர்ச்சி, அந்த மூன்று கட்சிகளையுமே பயமுறுத்தி விட்டிருக்கிறது.

குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்கள் பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்து வருவதும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தே கணிசமான ஆதரவாளர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து வருவதும், அரசியல் சூழலையே புரட்டிப் போட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, இடதுசாரிகளுடன் கைகோக்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்வந்திருப்பதிலிருந்தே எந்த அளவுக்கு அரசியல் சூழ்நிலை மேற்கு வங்கத்தில் மாற்றம் கண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 மக்களவைத் தொகுதிகளில் 34 தொகுதிகளை வென்றது என்றாலும்கூட, எதிர்பாராதவிதமாக பா.ஜ.க. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதும், 17% ஆக அதன் வாக்கு விகிதம் அதிகரித்திருந்ததும்தான் முடிவுகள் தந்த அதிர்ச்சியாக இருந்தது. காங்கிரஸýம் (4), இடதுசாரிக் கட்சிகளும் (2) செல்வாக்குச் சரிவை எதிர்கொண்டன.

இடைத்தேர்தல் நடைபெறும் தட்சிண பஸீர்ஹாட்டில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாகவும், கடந்த மக்களவைத் தேர்தலில் செüரங்கி தொகுதியில் காங்கிரஸ் முன்னணியில் இருந்ததால், அந்தக் கட்சி அங்கே வெற்றி பெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினால், அது ஆளும் திரிணாமுல் காங்கிரஸýக்கு மிகப்பெரிய சறுக்கலாகக் கருதப்படும் என்பதால், முதல்வர் மம்தா பானர்ஜி முழுமூச்சில் அரசு இயந்திரத்தையும், கட்சிப் பிரசாரத்தையும் முடுக்கிவிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் (4), அஸ்ஸாம் (3), சத்தீஸ்கர் (1), சிக்கிம் (1), திரிபுரா (1) ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற இருக்கிறது.

இன்றைய இடைத்தேர்தலில் மக்கள் அளிக்க இருக்கும் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, ஆனந்திபென் படேல், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி என மூன்று முதல்வர்களுக்கும்கூட வருங்காலத்தை உறுதிப்படுத்தக் கூடியது என்பதால், அரசியல் பார்வையாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு இது விடைத்தேர்தலாக அமையுமா இல்லை கடைத் தேற்றமாக மாறுமா என்பதை முடிவுகள் தீர்மானிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.