அமெரிக்கா செல்லவிருந்த 19 மாணவர்கள் தடுத்து நிறுத்தம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு செல்லவிருந்த 19 மாணவர்களை ஏர் இந்தியா நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு செல்லவிருந்த 19 மாணவர்களை ஏர் இந்தியா நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் அந்த இரு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா அரசால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இதேபோல், அப்பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக சென்ற இந்திய மாணவர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதுபோன்ற சங்கடமான நிலையை தவிர்க்கும் நோக்கிலேயே இன்று 19 மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
Advertisement
பயணத்துக்காக மாணவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை கடந்த 19 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக வரும் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 14 மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்கா சென்றபிறகு, திருப்பி அனுப்பப்படுவதால் மாணவர்கள் திரும்பி வருவதற்கான பணத்தை சேர்ப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், விமானங்களிலும் உடனடியாக இருக்கைவசதி கிடைப்பதில்லை.
இந்நிகழ்வுகளை கருத்தில் கொண்டே தற்போது 19 மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஏர் இந்தியா கிளை அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த மாணவர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி உடனடியாக இருக்கை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று, சில ஊடகங்களில் வெளிவந்த தவறான தகவல்களாலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
'மாணவர் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்த தகவல்கள் ஏதும் தற்போதைக்கு தங்களிடம் இல்லை. இதுகுறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக பகிர்ந்து கொள்கிறோம்' என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதக அலுவலகம் கூறியுள்ளது.