முகப்பு
இந்தியா

நிறைவேறியது எஸ்.சி/எஸ்.டி திருத்த மசோதா

எஸ்.சி/எஸ்.டி எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் எஸ்.சி/எஸ்.டி திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 21 டிசம்பர், 2015 at 7:06 PM
பகிர்:

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் எஸ்.சி/எஸ்.டி திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (அடக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பு) திருத்த மசோதா - 2014 என்ற பெயரிடப்பட்ட இந்த மசோதாவை மத்திய சமூகநலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

Advertisement

இந்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் வெகுநாள்களாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா எவ்வித விவாதமுமின்றி அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

புதிய மசோதாவின் உள்ள அம்சங்கள் வருமாறு:

இந்த மசோதா ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (அடக்குமுறைகளில் இருந்து பாதுகாப்பு) திருத்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாகும்.

புதிய மசோதாவின்படி எஸ்.சி/எஸ்.டி  எதிரான வழக்குகளுக்காக சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

எஸ்.சி/எஸ்.டி வகுப்பினரை ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்க கூடாது என கூறுதல் குற்றமாகும்.

எஸ்.சி/எஸ்.டி வகுப்பினருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிமித்தல் குற்றமாகும்.

எஸ்.சி/எஸ்.டி பெண்களை மோசமாக சித்தரித்தல், தகாத நோக்கோடு தொடுதல், மோசான வார்த்தைகளை பயன்படுத்துதல், தேவதாசியாக மாற்றுதல் ஆகியவை குற்றமாகும்.

இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றங்கள் வருமாறு:  எஸ்.சி/எஸ்.டி இனத்தவர் மீது செருப்பு மாலை அணிவித்தல், இறந்தபோன மனிதர் அல்லது விலங்குகளை கட்டாயமாக அப்புறப்படுத்த வலியுறுத்தல், பொதுஇடங்களில் ஜாதியை கூறி வசைபாடுதல், சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தல்

எஸ்.சி/எஸ்.டி இனத்தவரை கீழ்காணும் செயல்களிலிருந்து விலக்கி வைக்கக் கூடாது: பொது சொத்து உபயோகித்தல், அனைவரும் அனுமதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள், கல்வி மற்றும் மருத்துவமனைகள் நுழைதல்.

எஸ்.சி/எஸ்.டி அல்லாத அரசு ஊழியர் எஸ்.சி/எஸ்.டி இனத்தவருக்கான சேவையை செய்யாமலிருந்தால் அவருக்கு ஆறு மாதம் முதல் ஒராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.