மோடியின் இலங்கைப் பயணம்...
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எல்லா வீடுகளுமே நான்கு பக்கமும் மதிலால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
2. உடனடி விளைவு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எல்லா வீடுகளுமே நான்கு பக்கமும் மதிலால் பாதுகாக்கப்பட்டிருக்கும். வீட்டிற்குள் ஒரு நன்னீர்க் கிணறு, சிறிதாகவோ இல்லை பெரிதாகவோ ஒரு முற்றம் இருக்கும். முற்றத்தில் துளசி மாடத்துடன், முக்கனிகளில் ஏதாவது ஒன்று இருக்கும். வீட்டின் பின்புறத்தில் சிறிய காய்கறித் தோட்டம் இருக்கும். போரால் பாதிக்கப்பட்டது என்பதைத் தவிர வேறு குறையில்லை. அற்புதமான செம்மண் பூமி. பொன் விளையும் பூமி என்பார்கள். அங்கே எது போட்டாலும் முளைக்கும், காய்க்கும், பூக்கும்.
இதுவரையான யாழ்ப்பாண வரலாற்றில் "பஞ்சம்' என்ற ஒன்றை அப்பகுதி மக்கள் சந்தித்தே இல்லை. 1987-இல் யாழ்ப்பாணம் வந்த இந்திய ராணுவம், ஒவ்வொரு வீட்டிற்கும் தனிக்கிணறு, முற்றம், மதில், தோட்டம் இருப்பதைப் பார்த்துவிட்டு "எல்லா வசதிகளும் இருந்தும் நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்' எனச் சந்தேகமாகக் கேட்க, "எல்லாம் இருந்தும் உரிமை இல்லையே' என யாழ்ப்பாண மக்கள் பதிலளித்தார்கள் என்பார்கள்.
Advertisement
யாழ்ப்பாணத்திலுள்ள வயாவிளான் கிழக்குப் பகுதி "பொன் விளையும் பூமி'களில் ஒன்று. இங்கிருந்து விளைவிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளும், கத்தரிக்காய்களும் ஒருகாலத்தில் பாகிஸ்தான் வரைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதை நான் இறந்த காலத்தில் சொல்லக் காரணம், அந்த மக்களின் நிலங்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவே அவர்கள் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டனர்.
மோடியின் யாழ்ப்பாண வருகையை ஒட்டிய உடனடி விளைவாக வயாவிளான் கிழக்குப் பகுதியை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுந்த மகிழ்ச்சியாக தமது வீடுகளைத் தேடிச் சென்ற மக்களுக்கு "இந்த வெட்ட வெளிக்கு அந்தப் பக்கம் உமது காணிகள்தான்' என்று சொல்லப்பட்டதாம். ஆனால், அந்த வெட்ட வெளிக்கு அந்தப் பக்கமும் முழுவதும் வெட்ட வெளியாகவே இருக்க செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர் மக்கள்.
விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலங்களும் எந்தப் பயனும் தராத வகையில் வெற்றுத் தரையாகவே காட்சியளிக்கின்றன. அங்கிருந்த வீடுகள், கிணறுகள், முற்றங்கள், துளசி மாடங்கள், தோட்டங்கள் இருந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமது நிலங்களைத் தேடி, தமது கிணற்றில் இருந்து ஒரு வாய் நீர் அருந்தச் சென்றவர்களுக்கு கிடைத்தது வெறும் கட்டாந்தரை. வெட்ட வெளி.
நிலமாவது கிடைத்ததே என மக்கள் மகிழ்கின்றனர். இருந்தாலும், அந்த நிலங்களில் மீள் குடியேற்றம் உடனடியாக சாத்தியமாகிவிடாது என்கிறார்கள் வல்லுனர்கள். இலங்கை அரசாங்கம் வெறும் நிலங்களை மட்டுமே மக்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரங்கள் எல்லாமே களவாடப்பட்டு விட்டன. அந்த நிலங்களில் சிறிய கொட்டிலைப் போட்டு, கிணற்றைத் தூர்வாரி வாழ்க்கையை ஆரம்பிக்க குறைந்தது 5 லட்சம் இலங்கைப் பணம் தேவை. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக இருந்த மக்களிடம் அவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்க முடியாது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சில வீடுகள் மட்டும் ஓரளவுக்கு உருச்சிதையாமல் இருக்கின்றன. மக்களிடம் நிலங்களை ஒப்படைக்கும்போது அந்த வீடுகளில் இருந்த அனைத்துப் பொருள்களையும் ராணுவத்தினர் ஏற்றிச் சென்றுள்ளனர். மின்சார இணைப்புகள் கூடத் துண்டிக்கப்பட்டு விட்டன. நிலம் இல்லாமல், சொந்த நாட்டில் அகதியாக இருந்தவர்களுக்கு நிலம் கிடைத்துவிட்டது. "சொந்த மண்ணிலே எனது கட்டை வெந்தால் போதும்' என்ற சிலரின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த மக்கள், மோடியின் வருகையால்தான் தமது நிலங்கள் மீட்கப்பட்டன என நம்புகிறார்கள். ஆனால், மீட்கப்பட்ட நிலங்களில் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க இன்னொரு மீட்பாளரோ, இல்லையேல் இன்னொரு தடவை மோடியோ யாழ்ப்பாணம் வரவேண்டும் என்கிறார்கள்.
தொடரும்...