மோடியின் இலங்கைப் பயணம்...
யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக தலைமன்னார் சென்ற மோடி அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரயில் நிலையத்தையும், தலைமன்னாரில் இருந்து மடுவுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையையும் தொடக்கிவைத்தார்.
3. தலைமன்னாரில்...
யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக தலைமன்னார் சென்ற மோடி அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரயில் நிலையத்தையும், தலைமன்னாரில் இருந்து மடுவுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையையும் தொடக்கிவைத்தார். தலைமன்னாரிலும் தமிழ் மக்களால் மோடிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன் மிக இயல்பாக பழகினார் மோடி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த மோடி, உங்களின் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சிறிது நாட்களுக்குப் பொறுமையாக இருங்கள் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியப் பிரதமரைச் சந்தித்தது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில் "இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைப்பதுதான் இனப்பிரச்னைக்கான தீர்வுக்கு அடிப்படையானது என்பதையும், உயர் பாதுகாப்பு வளையங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதையும் அவரிடம் வலியுறுத்தினோம். இலங்கை அதிபரை சந்தித்துப் பேசியபோது மீள் குடியேற்றம், அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர் சாதகமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். நீங்கள் பொறுமையாக இருங்கள்' என மோடி வலியுறுத்தியுள்ளார் என்றார்.
Advertisement
இனப் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு இந்தியா எப்போதும் உதவியாக இருக்கும் என்ற மோடி, கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பார்த்து "இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா...?' எனக் கேட்க அதற்கு "ஆம்' என ஒரே குரலில் அவர்கள் பதிலளித்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஓரளவு அரசியல் உரிமைகளை வழங்கக் கூடிய "13-வது திருத்தச் சட்ட'த்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில் வைத்து வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடியின் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியதாக இருந்தாலும், அரசியல் ரீதியிலான நிரந்தரத் தீர்வை இதன் மூலம் பெற முடியாது. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்ளாது உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு பெரிய பலனைத் தராது என வட மாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காத 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மோடியை சந்திப்பற்கு முந்தைய நாள் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தனது தோல்விக்கு இந்திய உளவு அமைப்பான "ரா'தான் காரணம் என அவர்களை கடுமையாகச் சாடி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக "மோடி-ராஜபட்ச' இடையான சந்திப்பை இந்திய உயர் அதிகாரிகள் ரத்துச் செய்தனர். எனினும், மகிந்த ராஜபட்சவின் வேண்டுகோளின் பேரில், இறுதி நிமிடத்தில் இந்த சந்திப்புக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டது. "ரா'வின் மீது குற்றம் கூறுவது என்பது என் மீதும், இந்தியா மீதும் குற்றம் சாட்டுவதற்குச் சமானமானது. அரசியலில் பல வருட அனுபவமுள்ள நீங்கள் எப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம்' என மோடி கடுமையாகக் கேட்க, சிரித்து சமாளித்தார் ராஜபட்ச என்கிறார்கள்.
யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பாக இலங்கைப் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மோடி "இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடனும், அமைதியாகவும் வாழ வழிவகை செய்யுங்கள் என்று இலங்கை அரசை வலியுறுத்தினார்' எப்படி இருந்தாலும் மோடியின் யாழ்ப்பாண விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாற்றுப் பதிவு மட்டுமே
காந்திக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியத் தலைவர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் மோடியின் வருகையில் நிகழவில்லை என்கிறார் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கருணாகரன்.
"முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை - இந்திய மீனவர் பிரச்னை தொடர்பாகக்கூட மோடி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை. இந்தப் பிரச்னையினால் வடபகுதி மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, வடக்கிலிருந்து இந்தியாவுக்கான பயண ஒழுங்கைக்கூட மோடியின் வருகை உண்டாக்கவில்லை. பலாலி விமான நிலையத்தில் இருந்து முன்னர் இந்தியாவுக்கான விமான சேவையும், தலைமன்னாரிலிருந்து கப்பல் சேவையும் நடந்தது. இதைக்கூட மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லையே என்ற ஏமாற்ற உணர்வு மக்களிடம் உண்டு. தமிழ் பேசும் மக்களின் பொதுவான அரசியல் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புகள் எதையும் மோடி பிரதிபலிக்கவில்லை. எந்தப் புதிய சேதிகளையும் அவர் சொல்லவும் இல்லை. புதிய செயல்களை அவர் செய்யவும் இல்லை. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த இந்திய உதவி வீட்டுத் திட்டத்தைக் ஒப்படைத்ததையும் கலாசார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டியதையும் விட புதிய நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.
மோடி தமிழர்களுக்கு மிகத் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையும்கூட. இலங்கையின் இன முரண்பாடு, இனப் பிரச்னைக்கான அரசியல் தீர்வு ஆகியவை பற்றி இந்தியாவின் எல்லையானது இலங்கை - இந்திய உடன்படிக்கைக்குள்பட்டது மட்டுமே. கொழும்பை இந்தியா பகைத்துக் கொள்ளாது. ஆகவே, அதற்கு அப்பால் இனப் பிரச்னை விஷயத்தில் இலங்கைக்கு இந்தியா எத்தகைய அழுத்தங்களையும் தராது. இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் மோடி உணர்த்தியிருக்கிறார்.
அத்துடன் இலங்கை- இந்திய மீனவர் பிரச்னையில் இந்திய நலனை அது விட்டுவிடாது என்பதும் சொல்லாத சேதியாக சொல்லப்பட்டுள்ளது. மோடியின் யாழ்ப்பாண விஜயம் மட்டுமல்ல, தமிழர்கள் தங்களை மீளாய்வு செய்து கொள்வதற்கு மோடி விஜயம் உதவியுள்ளது என்ற வகையில் அதை வரவேற்கலாம் என்றார்.
-எழுத்தாளர் கருணாகரன்