பிறப்பு
குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத் நகர் என்ற கிராமத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார்.
பெற்றோர்
தந்தை - தாமோதர் மூல்சந்த் மோடி, தாய் - ஹிராபா.
பள்ளிப் படிப்பு
வத் நகரில் உள்ள பகவதாச்சார்யா நாராயணாச்சார்யா உயர்நிலைப் பள்ளி. சுருக்கமாக பி.என். ஹை ஸ்கூல்.
பள்ளி வாழ்க்கை
‘ஜோகிதாஸ் குமன்’, ‘ஹரியாலி நொ ஹத்யாரோ’ போன்ற நாடகங்களில் நடித்துள்ளார் மோடி. ‘பீலு ஃபூல்’ என்ற நாடகத்தைத் தானே எழுதி அரங்கேற்றினார்.
வத் நகர் ரயில் நிலையத்தில், மோடியின் தந்தை ஒரு டீக்கடை வைத்திருந்தார். பள்ளி முடிந்ததும் அப்பாவின் டீக்கடைக்குச் சென்று உதவியாக இருப்பார். அடிக்கடி நூலகம் சென்று புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறுவயது முதல் சேவை புரிவதில் ஆர்வம் அதிகம். இதனால் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
ஜோசியரின் வாக்கு
மோடிக்கு பன்னிரண்டு வயதாகும்போது ஜோசியர் ஒருவரைச் சந்தித்தார். மோடியின் பெற்றோர் மோடியின் ஜாதகத்தை அந்த ஜோசியரிடம் கொடுத்தார்கள். அதைக் கண்டவர் மோடியைப் பார்த்து, இந்தப் பையன் அரசியலுக்குள் நுழைந்தால் மகாராஜாவாக இருப்பார் என்று ஆருடம் சொல்லியிருக்கிறார். இல்லாவிட்டால் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு துறவியாகிவிடுவார் என்று கூறியுள்ளார்.
இமயமலை சென்றார்
விவேகானந்தரை மிகவும் தீவிரத்துடன் ஆழ்ந்து படித்ததால் இமயமலை மீது ஆர்வம் உண்டானது. கையில் காசு இல்லாமல் இமயமலை நோக்கிச் சென்றவர் அடுத்த இரண்டு வருடங்களுக்கு வீடு திரும்பவில்லை. பிறகு வீடு திரும்பியவர், ஒரே ஒருநாள் மட்டும் வீட்டில் தங்கிவிட்டு பிறகு வெளியேறிவிட்டார். 1967-ல் நடந்த சம்பவம் இது. அதன்பிறகு, 32 வருடங்களுக்கு வத் நகர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. 1999-ம் ஆண்டு, மோடி படித்த பள்ளியின் 50-வது ஆண்டு விழாவுக்காக மோடி அழைக்கப்பட்டார். பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக பல ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்தார் மோடி.
அஹமதாபாத் அழைக்கிறது
சிறுவயதில் வத் நகரில் இருந்து புறப்பட்ட மோடி, அஹமதாபாத்துக்கு வந்தார். அங்குள்ள குஜராத் பல்கலைக்கழகம் மூலமாக பி.ஏ மற்றும் எம்.ஏ (பொலிடிகல் சயின்ஸ்) பட்டங்களைப் பெற்றார். பகுதிநேரமாக ஒரு கேண்டீனில் பணியாற்றினார். பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்து 3 மாதத்தில் விலகிவிட்டார். அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முடிவெடுத்தார். பிறகு மனம்மாறி, 1971-ல், பாரதிய ஜன சங்கத்தின் சகோதர அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அரசியல் நுழைவு
‘லோக் சங்கர்ஷ் சமிதி’ என்கிற அமைப்பில் சேர்ந்துகொண்டு மக்கள் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1980-ல் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் மீது பிடிப்பு கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் மோடி. கடும் உழைப்பால் அடுத்த ஒரே வருடத்துக்குள் மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி பெற பல முயற்சிகள் எடுத்தார் மோடி. அவருடைய பொறுப்பில் பல தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்க ஆரம்பித்தது. அஹமதாபாத் நகர சபையைக் கைப்பற்றியது மோடியின் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது. தலைமைக்கு மோடி மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. 1989 குஜராத் சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மோடிக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் மீண்டும் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸே ஜெயித்தது.
இதன்பிறகு ராம ஜென்ம பூமி போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை புறப்பட்டார் எல்.கே. அத்வானி. இந்த யாத்திரையை ஏற்பாடு செய்கிற பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரபரப்பான ஒரு போராட்டம் இது. இதனால் இந்த யாத்திரையை முன்நின்று நடத்திய மோடிக்கு கட்சிக்குள் நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு, பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ரத யாத்திரைக்கான பொறுப்பையும் மோடி தான் கவனித்துக்கொண்டார். இதனால் கட்சியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது.
1995 குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளின் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. உற்சாகமாக வேலை பார்த்தார் மோடி. கட்சியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது பாஜக. மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளைக் கைப்பற்றியது. 1995, மார்ச் 14-ம் தேதி, குஜராத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. முதலமைச்சராக கேஷுபாய் படேல் பதவியேற்றார்.
இதனால், மோடிக்கு புரமோஷன் கிடைத்தது. கட்சியின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகு, 1998-ல், பாஜக-வின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் குஜராத்தில் நிலவிய சூழலால் 2001-ல், முதல்வர் பதவி மோடி வசம் வந்தது.
இதில் ஒரு பெரிய ஆச்சர்யம், மோடி அப்போது எம்.எல்.ஏ.வாகவோ எம்.பி.யாகவோ இல்லை. அதற்கு முன்பு ஒரு தேர்தலிலும் நின்றதுகூட கிடையாது. அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மோடி, முதலமைச்சர் ஆனார். 2001, அக்டோபர் 7-ம் தேதி, குஜராத்தின் புதிய முதலமைச்சர் ஆனார். ‘இந்த விநாடி முதல், குஜராத் என்னுடைய பொறுப்பு’ என்கிற வாக்குறுதியுடன் பதவியில் அமர்ந்தார். (பிறகு ராஜ்கோட் 2 தொகுதியில் போட்டியிட்டு எல்.ஏ.ஆ. ஆனார்.)
2002ல், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. டிசம்பர் 22-ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார் மோடி.
பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை குஜராத்துக்குக் கொண்டுவந்தார் மோடி. ‘இந்தியா டுடே’ பத்திரிகை, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மோடியை இந்தியாவின் சிறந்த முதலமைச்சராகத் தேர்வு செய்தது.
2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி. மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் மோடி. சிறப்பான ஆட்சி மூலம் குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். குஜராத்தில் அமைக்கப்பட்ட சோலார் (சூரிய ஒளி) ஆற்றல் திட்டம் இந்தியா முழுக்க பிரபலமானது.
2012 சட்டமன்றத் தேர்தலிலும் மோடியே வெற்றி பெற்று, நான்காம் முறையாக குஜராத்தின் முதல்வர் ஆனார்.
தேசிய அளவிலும் முன்னிலைப்படுத்தப்பட்டார் மோடி. 2013 ஜூன் 9 அன்று, பிஜேபி-யின் 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013 செப்டம்பர் 13 அன்று பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மே 16, 2014 அன்று மக்களவைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. மே 26 அன்று மோடி பிரமதராகப் பதவியேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.