இந்தியா

மோடி கிராமம்: வரமா! சாபமா!

’மோடி கிராமம்'பிற கிராமங்களின் பொறாமையையும் மீறி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை வளர்ச்சி என்பதா அதிகார மையத்தின் ஆளுமை என்பதா?!

கார்த்திகா வாசுதேவன்

சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் கடந்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகமே பார்த்து அசந்து போகும் அளவுக்கு பரபரவென்று பல நலத்திட்டப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள்  ஒட்டுமொத்தமாக தேர்தல் வருவதற்கு முன் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. பணிகள் நடைபெற்ற வேகத்தைக் கண்டு சென்னை மக்கள் மட்டுமல்ல மொத்த தமிழகமும் அசந்து போய் நின்றது. இதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில்  உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமம் தற்போது பேசப்படும் செய்தியாகி இருக்கிறது.

அந்த கிராமத்தின் பெயர் ஜெயப்பூர். இது நமது பாரதப் பிரதமர் மோடி தத்தெடுத்துள்ள கிராமம். 6 மாதங்களுக்குள் இந்த கிராமத்தில் அசர வைக்கும் முன்னேற்றங்கள். இந்த கிராமத்துக்குப் பக்கத்தில் நடந்து செல்லும் தூரத்தில்  உள்ள மற்றொரு கிராமம் பிகாரிபூர், ஜெயப்பூருக்கு அடித்த யோகம் பிகாரிப்பூருக்கு இல்லை. வீட்டுக்கு வீடு தனியாக டாய்லெட் வைத்துக் கொள்வதும், மின்வசதி செய்து கொள்ள நினைப்பதும் பிகாரிபூரைப்  பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே முடியக் கூடிய  ஆடம்பரச் செயல். ஆனால் ஜெயப்பூரில் பாருங்கள் வீட்டுக்கு வீடு டாய்லெட்டுகள், தெருவுக்குத் தெரு சூரிய சக்தியில் இயங்கும் குழல் விளக்குகள், யூனியன் மற்றும் சிண்டிகேட் வங்கிகளின் கிளைகள், பிரதமரின் தத்து கிராமத்தை உலகத்துடன் தடையில்லா தொடர்பில் வைக்க உதவும் மொபைல் ஹாட் ஸ்பாட்கள் என்று ஒரே செல்வ மயம்.

எப்படி இது சாத்தியமாயிற்று பக்கத்து கிராமத்தினர் இவர்களை பார்த்து பொறாமைப்பட மாட்டார்களா? என்றகேள்விக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ரகுவீர் பதில் சொல்கிறார். ' பக்கத்து ஊர்களுக்கு எங்கள் கிராமத்தைப் பார்த்து பொறாமை தான். இந்த ஆறு மாதங்களில் எங்கள் கிராமத்தின் தலையெழுத்து இத்தனை அருமையாக மாறும் என்று நாங்கள் நம்பவேயில்லை. அத்தனைக்கும் காரணம் மோடிஜீ தான், அவர் தில்லியில் இருந்தாலும் எப்போதும் எங்கள் கிராமத்தை மறப்பதே இல்லை என்று உணர்த்த ஏராளமான நலத் திட்டங்களை இங்கே செயல்படுத்தி இருக்கிறார். வருங்காலத்தில் இந்த கிராமத்தை தொழில் மையமாக உருவாக்கி இங்கிருப்போருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் திட்டமும் கூட அவருக்கு உண்டாம்' என்றார்.

மோடி கிராமம் என்பதால் அவரது "தூய்மை இந்தியா" திட்டத்துக்கு இந்தக் கிராமத்தில் நல்ல வரவேற்பு,  அகண்ட பாலை வனத்தின் நடுவே சோலை போல சுற்றி இருக்கும் கிராமங்கள் அனைத்தும் பசி, பட்டினி, சுகாதாரமின்மை, வேலையின்மை என்று பஞ்சத்தில் வாடிக் கொண்டிருக்க ஜெயப்பூர் 'மோடியின் கிராமம்' என்ற பெருமையில் மின்னிக் கொண்டிருக்கிறது. இங்கேயும் பிரச்சினைகள் இல்லாமலில்லை, அவ்வப்போது சமாஜ்வாடி கட்சியினரால் தொல்லைகள் வந்து கொண்டிருந்தாலும் பா.ஜ.க   வினரின் தொடர் ஆசியால் 'மோடி கிராமம்'பிற கிராமங்களின் பொறாமையையும் மீறி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை வளர்ச்சி என்பதா அதிகார மையத்தின் ஆளுமை என்பதா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT