இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு இனி என்னவாகும்? சட்ட நிபுணர்கள் விளக்கம்

DIN


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செய்த சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இனி என்னவாகும்? தீர்ப்பு வழங்கப்படுமா? மறு விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விகளுக்கு இரு வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில், முக்கிய நபராக ஜெயலலிதா சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில், வழக்கு முடித்து வைக்கப்படுமா அல்லது சசிகலா நடராஜன், வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோர் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்குமா என்று சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சட்டத்துறை நிபுணர்களும் இரு வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கைவிடப்படும். குற்றவியல் சட்டப் பிரிவு 394ன் படி, அனைத்து முறையீட்டு வழக்குகளும் - குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டாலும் - குற்றம்சாட்டப்பட்டவரின் மரணத்தைத் தொடர்ந்து வழக்கு கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்கை கைவிடுவதா அல்லது மேற்கொண்டு மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான தீர்ப்பை வெளியிடுவதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில், இந்த வழக்கில், மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், நீதிபதிகள், அது குறித்த தீர்ப்பை பதிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில், முக்கியக் குற்றவாளி மற்றும் அரசு ஊழியரின் மரணத்தைத் தொடர்ந்து வழக்கு கைவிடப்படாது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களின் குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் என்றும் தெரிவிக்கிறார் சால்வே.

அதே சமயம், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்து விட்டால்... அரசுப் பதவியை துஷ்ப்பிரயோகம் செய்ததுதான் முக்கிய வழக்கு என்றால், பிறகு அந்த வழக்கின் விசாரணையில் என்ன இருக்கிறது? என்று மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான கேடிஎஸ் துள்சி கூறியுள்ளார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதனிடையே, வழக்கில் மற்ற நபர்கள் மீதான தீர்ப்பு வெளியாகுமா அல்லது வழக்கு கைவிடப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT