ட்விட்டரிலும் தொடரும் அரசுப் பணி: சுஷ்மாவுக்கு சர்வதேச விருது!
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் மூலமாகவும் தன்னுடைய அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சர்வதேச நாளிதழ் ஒன்றின் விருது கிடைத்துள்ளது.
புதுதில்லி: பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் மூலமாகவும் தன்னுடைய அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சர்வதேச நாளிதழ் ஒன்றின் விருது கிடைத்துள்ளது.
பிரததமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சுஷ்மா ஸ்வராஜ்.தான் பதவியேற்ற காலத்தில் இருந்து சமூகவலைத்தளமான டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர்களில் ஒருவர்.
துறை சார்ந்த அறிவிப்புகள்,கருத்துக்கள் ஆகியவற்றை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொளவதோடு மட்டும் அல்லாமல், தன்னிடம் உதவி கேட்டு செய்யப்படும் டீவீ ட்டுகள் எதுவாக இருந்தாலும் அதை மதித்து பதில் அளிப்பவர்.மேலும் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தன்னை டிவிட்டரில் பின்தொடர்பவர்களிடம் பகிர்ந்து கொள்வார்.
வெளிநாட்டு பயணங்களின் போது தூதரக ரீதியிலான உதவி கோருபவர்கள், அல்லது ஏதேனும் முக்கிய காரணங்களுக்காக இந்தியாவுக்கு வர முயலும் போது சட்ட ரீதியிலான சிக்கலில் இருப்பவர்கள்,அவசர மருத்துவ உதவி கோருபவர்கள் என பலவேறு விதமான கோரிக்கைகளுக்கும் அவர் சரியான உதவிகளை தக்க சமயத்தில் செய்துள்ளார். சமீபத்தில் சிறுநீரக சிகிச்சையின் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதும் கூட, தனக்கு டிவிட்டரில் வந்த கோரிக்கைகளை தீர்க்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடரும் சுஷ்மாவின் சேவையை பாராட்டி 'பாரீன் பாலிஸி' எனப்படும் சர்வதேச நாளிதழ் ஒன்று அவரை 2016-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய 15 'சர்வதேச சிந்தனையாளர்களில்' ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது. ஹிலாரி கிளிண்டன், ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மார்க்கெல் மற்றும் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரீடியூ ஆகியோர் விருது பெரும் மற்ற சிலராவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த செய்தியை அறிவித்து சுஷ்மாவை டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.