முகப்பு
இந்தியா

மும்பை புறநகர் ரயில்களில் கேமிராக்கள்: ரயில்வே பரிசீலனை

மும்பை புறநகர் ரயில்களில் கேமிராக்கள் பொருத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2016 at 5:59 PM
பகிர்:

மும்பை புறநகர் ரயில்களில் கேமிராக்கள் பொருத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் துறைமுகம் வழித்தடங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பேர் நாள்தோறும் புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இடம் ஒதுக்க வலியுறுத்தும் பொதுநலன் வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் பெண் பயணிகளின் பாதுகாப்பு, விபத்துக்கள், பயணிகள் நெரிசல் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு இன்று நீதிபதி நரேஷ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்ததது.

அப்போது ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு ரயில்வே சார்பிலும் கூட்டு குழு அமைக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில் கேமிரா பொருத்துவது குறித்து ஆராயப்படும். அந்த குழு எடுக்கும் முடிவுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, ரயில் தண்டவாளங்கள் அருகே இரும்பிலான வேலிகள் அமைக்கவும், வேலிகள் மேல் முள் கம்பிகளை பொருத்தவும் நீதிபதி ரயில்வே நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் பயணிகள் தண்டவாளங்களை கடப்பது தடுக்கப்படும் என்றார்.

மேலும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரத்தை அதிகப்படுத்தப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையேயுள்ள இடைவெளியில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்றார் நீதிபதி.

மேலும், ரயில் தண்டவாளங்களின் அருகேயுள்ள மின்கம்பங்களை அகற்றவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் படிகளில் தொங்கி கொண்டு செல்பவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாவது தடுக்கப்படும் என்றார்.

மும்பை நகரில் உயர்த்தப்பட்ட வழிதடத்தில் புறநகர் ரயில்வே சேவையை தொடங்குவது குறித்து மகராஷ்டிர அரசுக்கு ரயில்வே நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது என ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

இதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.