ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தை நடத்தி வரும் ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு மல்லையா அளித்த காசோலையில் பணம் இல்லாததால் அவருக்கு பிணையில் வர இயலாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரின் எரமாஞ்சியில் உள்ள 11-வது சிறப்பு முதன்மை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கிங்ஸ்பிஷர் நிறுவனம் அளித்த ரூ. 50 லட்சத்துக்கான 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இந்த ஆணையை மார்ச் 29 ஆம் தேதிக்குள் செயல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மல்லையாவின் வழக்குரைஞர் ஹெச்.சுதாகர் ராவ், மல்லையா மீது நான்கு பிணையில் வர இயலாத பிடி ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாததால் திரும்பி வந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான நான்கு காசோலைகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது மல்லையா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. அதுபோன்று இந்த நான்கு வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் என்றார்.
கடந்த 10 ஆம் தேதி ஹைதராபாத் 14-வது கூடுதல் முதன்மை நீதிமன்றம், ரூ. 50 லட்சம் காசோலை மோசடி வழக்குத் தொடர்பாக விஜய் மல்லையா மற்றும் கிங் பிஷர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கும் பிணையில் வர இயலாத பிடி ஆணைப் பிறப்பித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜிஎம்ஆர் நிறுவனத்தின் வழக்குரைஞர் ஜி அசோக் ரெட்டி, கிங் பிஷர் நிறுவனம் ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ரூ. 8 கோடி வரை செலுத்த வேண்டும். இதற்காக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்திய வங்கிகளிடமிருந்து சுமார் 9000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.