புணேவில் கடந்த 2010ம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றவாளியான மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஹிமாயத்துக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம், அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதாகவும், ஆனால், வெடிபொருட்களை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.எச். பட்டீல் மற்றும் எஸ்.பி. ஷுக்ரே ஆகியோர் கொண்ட அமர்வு மிர்ஸா ஹிமாயத் பெய்க்(33) மீது கொலை (302), கொலை முயற்சி (307), வெடிபொருள்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்தல் (435) உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
அதே சமயம், போலி ஆவணம் தயாரித்தல் (474) உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் தண்டனையை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் இரண்டு நேரடி சாட்சிகள், தங்களது முந்தைய வாக்குமூலம் மிரட்டிப் பெறப்பட்டதாகவும், தற்போது தங்களது வாக்குமூலத்தை புதிதாகப் பதிவு செய்யவும் மனு தாக்கல் செய்திருந்தது, ஹிமாயத்துக்கு சாதகமான தீர்ப்பை அளிக்க வகை செய்துள்ளது.
வழக்கின் பின்னணி:
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் 64 பேர் காயமடைந்தனர்.
இவ்வழக்கில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மிர்ஸா ஹிமாயத் பெய்க் (33) மீது கொலை (302), கொலை முயற்சி (307), வெடிபொருள்களைப் பயன்படுத்தி சேதம் விளைவித்தல் (435), போலி ஆவணம் தயாரித்தல் (474), மத, இன, பிறப்பிடம், மொழி அடிப்படையில் இருபிரிவினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் (153-ஏ), குற்றச்சதி (120-பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், கடந்த 2013ம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.