இந்தியா

11,000 என்.ஜி.ஓ.க்களின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

DIN

நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
அந்தப் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களும், நூற்றுக்கணக்கான பள்ளிகளும், சில கல்வி நிறுவனங்களும், சாலையோரக் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் பிரபலமான சில தன்னார்வ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
2010-ஆம் ஆண்டைய வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் 11,319 தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை கடந்த ஜூன் மாத இறுதிக்குள் புதுப்பிக்கவில்லை. அந்த அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசமும், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
எனவே, அந்த அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதேபோல், 3 ஆண்டுகளாக வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத 10,000 தன்னார்வ அமைப்புகளின் பதிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அவற்றில், பெரும்பாலான அமைப்புகள் செயல்படாதவை அல்லது வெளிநாட்டு நன்கொடையைப் பெற விரும்பாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அவகாசம்: இதனிடையே, உரிய காலத்தில் விண்ணப்பிக்காததாலும் போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யாததாலும் 1,736 தன்னார்வ அமைப்புகளின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை.
அவற்றில், ராமகிருஷ்ணா மிஷன், மாதா அமிர்தானந்தமாயி அறக்கட்டளையின் சில கிளைகள், கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் போன்ற பிரபலமான அமைப்புகள், ஜூன் 30-க்கு முன்பாகவே இணையதளத்தில் விண்ணப்பித்தபோதிலும், அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. எனவே, போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம், வரும் 9-ஆம் தேதி வரை மீண்டும் அவகாசம் அளித்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை தடுப்புச் சட்டத்தால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 42,500-ஆக இருந்த வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளின் எண்ணிக்கை, தற்போது 20,500-ஆகக் குறைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி தினகரன் சந்திப்பு!

உணவு டெலிவரி ஊழியரை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி! பெங்களூரில் பதறவைக்கும் விடியோ

டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம்: அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- ராமதாஸ்

அமித் ஷாவின் பதில்தான் எங்களுடையதும்; கூட்டணி விரிவுபடுத்தப்படும்: தமிழிசை

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்!

SCROLL FOR NEXT