இந்தியா

பிரதமர் மோடி ஜப்பான் பயணம்: அபேவுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

DIN

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் வெள்ளிக்கிழமை முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது.
இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர மாநாடு, டோக்கியோவில் வெள்ளிக்கிழமை (நவ.11) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜப்பான் சென்றார்.
அந்த மாநாட்டில், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் விவாதிக்கவுள்ளனர்.
மாநாட்டின் முடிவில், 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், டோக்கியோவிலும், கோபே நகரிலும் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடைபெறவுள்ள ஜப்பான் தொழில்துறை தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
முன்னதாக, தனது ஜப்பான் பயணம் குறித்து மோடி கூறியதாவது:
அபேவுடனான சந்திப்பின்போது இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கிறேன். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய, ஜப்பான் தொழில்துறை தலைவர்களுடன் விரிவாக விவாதிக்கவுள்ளேன் என்றார் மோடி.
அணுசக்தி ஒப்பந்தம்: இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு நாடுகளும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதிசெய்வதில் மும்முரமாக உள்ளன.
இதற்கு முன்பு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோதே, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே ஒரு நிலையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான காரணங்களால் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், மோடியின் இந்தப் பயணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என்று தெரிகிறது.
டோக்கியோவில்..: இதனிடையே, பிரதமர் மோடி, பெருந்திரளான மக்களுடன் ஜப்பான் அரசர் அகிடோவை சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் மோடி சந்திக்கவுள்ளார்.
தாய்லாந்து அரசருக்கு அஞ்சலி: ஜப்பான் செல்லும் வழியில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மோடி தரையிறங்கினார்.
அங்கு கடந்த மாதம் காலமான அந்நாட்டு அரசர் பூமிபால் அதுல்யதேஜின் உடல் வைக்கப்பட்டுள்ள கிராண்ட் பேலஸ் வளாகத்தில் மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
""அதுல்யதேஜ், சர்வதேச அளவிலான ராஜதந்திரி; அவரது மறைவு, சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு'' என்று அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் மோடி எழுதினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT