ரூபாய் நோட்டுகள் பற்றிய மாநிலங்களவை விவாதத்தில் பிரதமர் பங்கேற்பார்: ஜேட்லி உறுதி!
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பற்றிய விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் உறுதி அளித்தார்.
புதுதில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பற்றிய விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் உறுதி அளித்தார்.
பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இன்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆனால், உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்பொழுது, 'விவாதம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் பிரதமர் அவைக்கு வர வேண்டுமென்று கூறினார்.
இதற்கு கோபமாக பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்புவதில்லை என்பது தற்பொழுது தெளிவாகியிருக்கிறது. எனவே விவாதத்திலிருந்து தப்புவதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டறிந்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.