காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்கும் கர்நாடகா மீண்டும் மேல்முறையீடு
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு இன்று மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
புது தில்லி: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு இன்று மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும் மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது.
எனினும், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும், அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்தது.
இவ்விரண்டு உத்தரவுகளையும் மாற்றக் கோரி கர்நாடக அரசு புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.