ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இருவேறு புனல் மின் உற்பத்தித் திட்டங்களை செவ்வாய்க்கிழமை, நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி. உடன் மாநில முதல்வர் வீரபத்ர சிங் உள்ளிட்டோர். 
இந்தியா

இந்திய ராணுவம் எந்த நாட்டுக்கும் சளைத்ததல்ல: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியப் பாதுகாப்புப் படையினரின் வீரமும், துணிச்சலும் வேறு எந்த நாட்டின் ராணுவத்துக்கும் சளைத்தது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தினமணி

இந்தியப் பாதுகாப்புப் படையினரின் வீரமும், துணிச்சலும் வேறு எந்த நாட்டின் ராணுவத்துக்கும் சளைத்தது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். அதிரடித் தாக்குதல்களுக்கு பெயர் பெற்ற இஸ்ரேல் ராணுவத்துடன் இந்தியப் படைகளை அவர் ஒப்பிட்டும் பேசினார்.
 பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்குப் புகழாரம் சூட்டும் வகையில் பிரதமர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 பதான்கோட் மற்றும் உரி தாக்குதல் சம்பவத்துக்குப் பதில் நடவடிக்கையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அண்மையில் அதிரடியாக நுழைந்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தனர்.
 இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தபோதிலும், இதுதொடர்பாக உரிய ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தத்தில் இருந்து அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறது மோடி அரசு' என்று விமர்சித்தார். இந்தக் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
 இந்தச் சூழலில், ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இருவேறு புனல் மின்உற்பத்தித் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த பிரதமர் மோடி, இதுகுறித்துப் பேசியதாவது:
 மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாதுகாப்புத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராணுவத்தினருக்கான ஓய்வூதிய நடைமுறையில் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் இழுபறியில் இருந்த வந்த "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய பாஜக அரசுதான் அமல்படுத்தியது.
 இதற்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களும் இதுதொடர்பான அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் அளித்தனர். அதற்காக ரூ.500 கோடி வரை ஒதுக்கீடும் செய்தனர். ஆனால், உண்மையில் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு? அதனால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவாகும்? என்பன குறித்து முந்தைய ஆட்சியாளர்கள் ஆராயவில்லை. அதனால்தான் "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டம் முந்தைய காலங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
 இதுகுறித்து மத்திய அரசு கணக்கிட்டுப் பார்த்ததில், ரூ.10,000 கோடி கூடுதல் செலவாகும் என்பது தெரியவந்தது. இது மிகவும் பெரிய தொகையாகும். மிகவும் சவாலான இந்தத் திட்டத்தை மத்திய அரசு திறம்பட கையாண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
 துல்லியமான ராணுவ நடவடிக்கைகளுக்கும், அதிரடி தாக்குதல்களுக்கும் இஸ்ரேல் நாட்டுப் படைகள் பெயர் பெற்றவை என்பதை நாம் கேட்டிருக்கிறோம். அதைப்போல, இந்திய ராணுவமும் எந்த நாட்டுப் படைக்கும் சளைத்தது அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
 இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் மண்டியில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஹிமாசலப் பிரதேசத்தைப் பொருத்தவரை, மாநில முதல்வர் வீரபத்ர சிங்கின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை (சொத்துக் குவிப்பு) சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் எல்லாம், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஆனால், வீரபத்ர சிங்கோ சுயநலத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் என்றார் மோடி.
பிரதமரிடம் 13 அம்சக் கோரிக்கை
 வனப் பகுதிகளைப் பாதுகாக்க ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் செவ்வாய்க்கிழமை அளித்தார்.
 ஹிமாசலப் பிரதேசத்தில் அமையவிருக்கும் புனல் மின் உற்பத்தித் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் என்றும், மலைப் பிரதேசங்களுக்கு கூடுதல் மின்விநியோகம் அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
 இதைத் தவிர, சிம்லாவில் இருந்து வர்த்தக விமான சேவை இயக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT