கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு சம்மன் அனுப்பக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக தில்லி பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செய்தியாளர் ஆமீர் கான் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:
கடந்த 2004-ஆம் ஆண்டு, 2011 மற்றும் 2014-ஆம் ஆண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் கல்வித் தகுதி தொடர்பாக பொய்யான தகவலை அளித்துள்ளார். இதன்மூலம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125-ஏ பிரிவை அவர் மீறியுள்ளார். எனவே அந்த சட்டப்பிரிவை மீறி குற்றங்கள் இழைத்த காரணத்துக்காக ஸ்மிருதி இரானியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீது தில்லி பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹர்வீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மனுதாரர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மையான ஆதாரம் (2004-ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தை குறிப்பிடுகிறார்) பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டது. இதுதொடர்பான இரண்டாவது ஆவணமும், நீதித்துறையின் ஆய்வுக்கு தகுதியானது அல்ல.
அதேபோல், 11 ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு ஸ்மிருதி இரானிக்கு எதிராக கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு, மனுதாரர் மிகவும் அதிக காலதாமதம் செய்துள்ளார். அதேப் போல், மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்மிருதி இரானிக்கு தேவையின்றி துன்புறுத்தல் அளிக்கும் வகையில் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. அவர் ஒருவேளை மத்திய அமைச்சராக இல்லையெனில், இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்திருக்க மாட்டார். எனவே மேற்கண்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, ஸ்மிருதி இரானிக்கு சம்மன் அனுப்பக்கோரி தொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்றார் நீதிபதி ஹர்வீந்தர் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.