இந்தியா

பாதுகாப்புத் துறை ரகசியங்கள் கசிவு? என் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை

DIN

"ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மாவுக்கு நான் பாதுகாப்புத்துறை ரகசியங்களைக் கசிய விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை, அவதூறானவை' என்று பாஜக எம்.பி. வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ரகசியங்களை பாஜக எம்.பி. வருண் காந்தி கசியவிட்டார் என்று ஸ்வராஜ் அபியான் கட்சிப் பிரமுகர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். தில்லியில் பத்திரிகையாளர்களை வியாழக்கிழமை சந்தித்த இருவரும், நியூயார்க்கைச் சேர்ந்த வழக்குரைஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த மாதம் அனுப்பிய கடித நகலை தங்கள் குற்றச்சாட்டு ஆதாரமாக காண்பித்தனர்.
அதில், பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரான பாஜக எம்.பி. வருண் காந்தியை சர்வதேச ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மா மற்றும் சில ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் மிரட்டி, இந்தியாவின் ஆயுதத் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான பல ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில் வருண் காந்தி சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் துளியளவு கூட உண்மையோ, அதற்கான ஆதாரமோ இல்லை. பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிலும், பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் நான் உறுப்பினராக இருந்தேன். எனினும், மேற்கண்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டதே இல்லை. நிலைக் குழுக் கூட்டங்களில் ஒரு சிலவற்றில் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறேன். எனினும், எந்தத் தகவலையும் நாடிப் பெற்றதோ அவற்றைக் கசியவிட்டதோ இல்லை.
எனக்கு ஏதாவது ரகசிய செயல்திட்டமோ, உள்நோக்கமோ இருந்திருந்தால், இந்தக் குழுக் கூட்டங்களில் எனது வருகைப் பதிவிலேயே அது பிரதிபலித்திருக்கும்.
வழக்குரைஞர் எட்மண்ட்ஸ் ஆலனின் கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுகளின் அவதூறு பரப்பும் தன்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்தக் கடிதத்தை எழுதிய அவரை நான் சந்தித்ததே இல்லை. அதேபோல் அவர் யார் என்பது குறித்தோ, பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளதுபோல் ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மாவின் நண்பர் என்ற முறையில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதோ எனக்குத் தெரியாது. பிரிட்டனில் நான் கல்லூரி மாணவராக இருந்தபோது அபிஷேக் வர்மாவின் அறிமுகம் கிடைத்தது. நாடாளுமன்ற எம்.பி.க்களாக இருந்த மறைந்த வீணா-ஸ்ரீகாந்த் வர்மா தம்பதியின் மகன் என்று அபிஷேக் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
அப்போது நாங்கள் சில தடவை சந்தித்துப் பேசியுள்ளோம். அப்போதும் நாங்கள் செய்து வரும் பணி குறித்து எப்போதும் விவாதித்ததில்லை. அதன் பின் நாங்கள் சந்தித்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், அவருடன் என்னைத் தொடர்புபடுத்தி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வருண் காந்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT