இந்தியா

மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் செல்லிடப்பேசிகளுக்குத் தடை

DIN

தொலைதொடர்புச் சாதனங்களில் உள்ள தகவல்களைத் திருடுவதன் மூலம் முக்கியத் தகவல்கள் வெளியே கசிவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதால், மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லிடப்பேசிகளை எடுத்துக் கொண்டு வர வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தனிச் செயலர்களுக்கு அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:
மத்திய அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவைக் குழு கூட்டங்கள் ஆகியவை நடைபெறும் இடங்களில் செல்லிடப்பேசிகளையோ அல்லது திறன் செல்லிடப்பேசிகள் எனப்படும் ஸ்மார்ட் ஃபோன்களையோ இனிமேல் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமைச்சர்களுக்கு தனிச் செயலர்கள் புரிய வைக்க வேண்டும்.
செல்லிடப்பேசிகளில் உள்ள தகவல்களைத் திருடுவதால் ஏற்படும் பாதுகாப்புக் குறைபாடு குறித்து பாதுகாப்புப் படையினர் சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும் முக்கிய விவகாரங்களின் ரகசியத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அறிவுறுத்தலை, மத்திய அரசு வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, அமைச்சர்கள் செல்லிடப்பேசிகளைக் கொண்டு வந்து அமைதியாக வைக்கவோ அல்லது அணைத்து வைக்கவோ அனுமதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT