இந்தியா

தமிழக மீனவர்களைத் துன்புறுத்தும் இந்திய கடலோரக் காவல் படையினர்: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

தினமணி

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மாநிலங்களவையில் திமுக குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:
கடந்த மார்ச் 29-ம் தேதி நாகப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இந்தியக் கடலோரக் காவல் படையினர் அவர்களை இந்திய கடல் பகுதியில் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

"நாங்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம்' என்று தமிழக மீனவர்கள் பதில் தெரிவித்தனர். ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையினர் அவர்களிடம் வித்தியாசமான முறையில் விசாரணை நடத்தியதுடன், தாக்கவும் செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் அடையாள அட்டைகளையும், படகு உரிமங்களையும் பறித்துக் கொண்டனர்.

நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்தான் துன்புறுத்தி வருவதாகக் தற்போது வரையிலும் கூறி வருகிறோம். ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

ஒருபுறம், இலங்கை கடற்படையினர் நமது மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்துவதாக பொய் வழக்குப் போட்டு வருகின்றனர். மற்றொருபுறம் இந்தியக் கடலோரக் காவல் படையினர், தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்தி, அடையாள அட்டைகளையும் உரிமங்களையும் பறித்து வருவது வருந்தத்தக்கது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

இலங்கைக் கடற்படையினர் நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குல் குறித்து ஏற்கெனவே பல முறை இந்த அவையில் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியக் கடலோரக் காவல் படையினரும், இலங்கை கடற்படையினரும் துன்புறுத்துவது நீடித்தால், தமிழக மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும்.

எனவே, தமிழக மீனவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க கடலோரக் காவல் படையினருக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் பொய் வழக்குப் போடுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT