இந்தியா

காஷ்மீரில் தேர்தல் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பெரும் வன்முறை மூண்டது.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பெரும் வன்முறை மூண்டது. வன்முறையாளர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர் வன்முறை உள்ளிட்ட காரணங்களினால், வெறும் 7.14 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீநகர், பட்காம், கந்தர்பல் ஆகிய 3 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்காம் மாவட்டம், சரார்-இ-ஷெரீஃப் பகுதியில் உள்ள பஹேர்போரா வாக்குச்சாவடி கட்டடத்துக்குள் போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் திடீரென்று அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை எச்சரிக்கும் வகையில், வாக்குச்சாவடியில் இருந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதை போராட்டக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் பின்னர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரட்சுனா பீர்வா பகுதியிலும் வாக்குச்சாவடி மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். அதே இடத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இதேபோல், தௌலத்புரா, மகம், சதுரா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலா ஒருவர் என்று மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கண்ட இடங்களில் இருதரப்புக்கும் நடைபெற்ற மோதலில், பாதுகாப்புப் படையினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாக்குச் சாவடிக்கு தீவைப்பு: ஓரிடத்தில் வாக்குச்சாவடி போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. மேலும், 2 வாக்குச்சாவடிகளை தீயிட்டுக் கொளுத்த போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். ஆனால், அது முறியடிக்கப்பட்டதாக தெரிகிறது.
பட்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில், 70 சதவீத வாக்குச்சாவடிகளில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வெளியேறி விட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காந்தர்பால் மாவட்டத்தில், வாக்குச்சாவடி மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்வதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.
கந்தர்பல் மாவட்டம், செனாரில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்ற கிராமத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.


முதல்வர் மெஹபூபா அதிர்ச்சி

ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலின்போது மூண்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், முக்கிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஸ்ரீநகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளருமான ஃபரூக் அப்துல்லா, செயல்தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் ஸ்ரீநகர் இடைத் தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மெஹபூபா முஃப்தி அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

SCROLL FOR NEXT