இந்தியா

ஆதார் கட்டாயமில்லை! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

DIN

அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் இன்னும் காலாவதியாகவில்லை என்றும் அவை உயிர்ப்புடன்தான் உள்ளன என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு மானியங்களைப் பெறுவதற்கும், வேறு சில சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இருந்தபோதிலும், வங்கிக் கணக்கு உள்பட பல்வேறு விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்குமாறு அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வெளியாகின.
இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பான் எண் கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. வரும் ஜூலை மாதம் முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தகுந்தாற்போல வருமானவரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட நிலையில், அந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் வாதிட்டதாவது:
ஆதார் சட்டம் என்பது மக்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்குவதற்குத்தானே அன்றி, அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதற்கு அல்ல. அதுதொடர்பான சட்டங்களிலேயே ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்ற அம்சங்கள் இல்லாத நிலையில் வருமான வரித் தாக்கலின்போது அதை அவசியம் சமர்ப்பிக்குமாறு ஏன் நிர்பந்திக்க வேண்டும்? எனவே, வருமான வரித் துறைச் சட்டத்தில் ஆதாரைக் கட்டாயமாக்கும் வகையில் திருத்தம் மேற்கொண்டது அரசியல் சாசன விதிகளுக்குப் புறம்பானது என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், 'ஏற்கெனவே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது; அந்த உத்தரவுகள் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளன' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT