இந்தியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,350 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

DIN

வடகிழக்கு மாநிலங்களுக்கு மழை-வெள்ள நிவாரண நிதியாக ரூ.2,350 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் மழை-வெள்ளத்துக்கு பலியான நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மிúஸாரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள், மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் கரை புரண்டோடும் மழை-வெள்ளத்துக்கு இதுவரையிலும் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதுடன், சொத்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ள சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
அங்கு அவர், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு மிஸோரம் முதல்வர் லால் தன்வாலா வரவில்லை. அவருக்கு பதிலாக, பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார்.
இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்து, அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் ரூ.2,350 கோடியை பிரதமர் அறிவித்திருக்கிறார். வெள்ள நிவாரணம், மறுவாழ்வு பணிக்கு சிறப்பு உதவியாக ரூ.2,000 கோடி நிதியையும் அவர் அறிவித்தார். இதில் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு தொகையைப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்து வரும் நாள்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இதேபோல், பிரம்மபுத்திரா நதி குறித்தும், அந்நதியால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியை பிரதமர் அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கான உயர்நிலைக்குழுவில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர். இக்குழுவினர், பிரம்மபுத்திரா நதி குறித்து ஆய்வு செய்து, அதனால் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பரிந்துரை செய்வர்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கு தனியாக உடனடி நிவாரணம், மறுவாழ்வு பணிக்கு ரூ.250 கோடியை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதத்தில், அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரூ.300 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். இன்று அறிவிக்கப்பட்ட ரூ.250 கோடி நிதி, ஜூன் மாதம் விடுவிக்கப்பட்ட ரூ.300 கோடியின் தொடர்ச்சியாகும் என்றார் ஹிமந்த விஷ்வ சர்மா.
இதனிடையே, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில், மழை-வெள்ளத்துக்கு பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்; இதேபோல், பலத்த காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது மாநிலத்தில் ரூ.3,888 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
- அஸ்ஸாம் முதல்வர்
சர்வானந்த சோனோவால்

ரூ.700 கோடி மதிப்புக்கு எங்கள் மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை மறுசீரமைப்பு செய்வதற்கு ரூ.700 கோடிக்கும் அதிகமாக நிதி எங்களுக்கு தேவைப்படுகிறது.
- நாகாலாந்து
முதல்வர் ஜெலியாங்

எங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்த அறிக்கை, கோரிக்கை மனு ஆகியவற்றை பிரதமரிடம் அளித்தோம். எங்களது கோரிக்கையை பிரதமர் அமைதியாக கேட்டார். மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு தேவையான உதவியை செய்து தருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.


- அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT