இந்தியா

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: கடு‌ம் ச‌ண்டையி‌ல் தமிழக வீர‌ர் உ‌ள்பட 2 பே‌ர் உயிரிழ‌ப்பு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் இட்டு உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில், தமிழக வீரர் உள்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

சோபியான் மாவட்டம், அவ்னீரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அக்கிராமத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டதால், இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
அவர்களில் ஒருவர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்திலுள்ள கண்டணி கிராமத்தைச் சேர்ந்த பி. இளையராஜா (25)ஆவார். மற்றொருவர், மகாராஷ்டிர மாநிலம், அகோலாவைச் சேர்ந்த கவாய் சுமேந்த் வாமன் ஆவார்.
இதனிடையே, சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டது. எனினும், பயங்கரவாதிகள் இருட்டை பயன்படுத்தி தப்பியோடி விடாதபடி, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்திருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது பயங்கரவாதிகள் 3 பேரும் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், யாசின் இட்டு என்ற கஜ்னவி ஆவார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதியாகச் செயல்பட்டு வந்தவர். மற்றொருவரின் பெயர் இர்பான். இணையதளம் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டவர். இன்னொருவர், இட்டுவின் பாதுகாவலர் ஆவார். யாசின் இட்டு, பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது உடலை குடும்பத்தினர் நேரில் அடையாளம் காட்டினர். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் கடந்த 1996-இல் இணைந்தார். பிறகு 2007-இல் சரணடைந்தார். இதையடுத்து, 2014-இல் பரோலில் வெளியே வந்த அவர் மீண்டும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்தும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்: இதேபோல், பந்திபோராவின் ஜாஹின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், ராணுவ வீரர் ஒருவரும், போலீஸார் 2 பேரும் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT