இந்தியா

முஸ்லிம் நபரின் திருமண ரத்து வழக்கு: என்ஐஏ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் தேசிய புலனாய்வு அமைப்பு

DIN

கேரளத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த ஷபீன் ஜஹான் என்பவர், ஹிந்து பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்னதாக, அந்தப் பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் பயங்கரவாத அமைப்பால் அந்தப் பெண் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதற்கு வெறும் கருவியாக ஜஹான் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்த திருமணத்தை 'காதல் ஜிகாத்' என்று தெரிவித்து ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற வழக்குகளை கேரள காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஷபீன் ஜஹான் மேல்முறையீடு மனு தொடுத்தார். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் மேற்பார்வையில், இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை முடிந்ததும், அதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து, கேரள காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்டபிறகு, இந்த விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
முன்னதாக, இந்த வழக்கு மீது கடந்த 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, இந்த வழக்குத் தொடர்பான விவரங்களை தேசிய புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT