உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை மாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள கதௌலி ரயில் நிலையம் அருகே ரயில் சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வந்தபோது 14 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் சில ரயில் பெட்டிகள், ரயில் பாதை அருகில் இருக்கும் வீடுகள் மீது விழுந்தன. இதில் அந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன.
விபத்து குறித்த தகவலின்பேரில் தேசிய பேரழிவு மீட்புப் படை வீரர்கள் 90 பேர், உள்ளூர் மீட்புக் குழுவினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பலரை கிரேன் வண்டி மூலம் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
ரயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
விபத்துக்கு என்ன காரணம்?: தண்டவாளத்தில் முன்னறிவிப்பின்றி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, ரயில் ஓட்டுநர் பிரேக்குகளை திடீரென அழுத்தியதால் ரயில்பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளின் சதியால் ரயில் விபத்து நேரிட்டுள்ளதா? என்ற கோணத்திலும் உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு: விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீட்புப் பணியை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும். சம்பவ இடத்துக்கு ரயில்வே துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை அனுப்பி வைத்துள்ளேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த ஒடிஸா மாநில பயணிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், விபத்தில் காயமடைந்தோருக்கு முழுமையான சிகிச்சைகளை அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வேதனை: ரயில் விபத்து குறித்த தகவல் அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி தனது வேதனையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில், "ரயில் விபத்து குறித்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைந்தேன்; விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மற்றும் சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ரயில்வே அமைச்சகமும், உத்தரப் பிரதேச அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.