இந்தியா

'எனக்கு எதிராக பொய்யான சர்ச்சையை கிளப்பினார் கேஜரிவால்'

'எனக்கு எதிராக, ஊடகங்களில் பொய் சர்ச்சைகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கிளப்பினார்' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு விசாரணையின்போது மத்திய நிதியமைச்சர்

DIN

'எனக்கு எதிராக, ஊடகங்களில் பொய் சர்ச்சைகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கிளப்பினார்' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு விசாரணையின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 1999 முதல் 2013 வரை அருண் ஜேட்லி பதவி வகித்தபோது, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கேஜரிவால் உள்ளிட்டோரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் ஜேட்லியிடம் 6-ஆவது கட்டமாக கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடத்தினர். உயர் நீதிமன்ற இணைப் பதிவாளர் பங்கஜ் குப்தா முன் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் 29 கேள்விகளை அருண் ஜேட்லியிடம் கேஜரிவாலின் வழக்குரைஞர்கள் முன்வைத்தனர். அக்கேள்விகளுக்கு பதிலளித்து, ஜேட்லி கூறியதாவது:
தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டில் எனக்கு எதிராக ஊடகங்களில் பொய்யான சர்ச்சையை கேஜரிவால் கிளப்பினார்.
இதைத் தொடர்ந்து, மக்களவையில் இப்பிரச்னையை காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் எழுப்பினார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு, அவையில் உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அங்கம் வகித்துள்ளேன். அப்போதெல்லாம், வேணுகோபாலோ அல்லது வேறு உறுப்பினர்களோ இப்பிரச்னையை எழுப்பியதில்லை. கேஜரிவால் குற்றச்சாட்டிய பிறகே, இப்பிரச்னை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்த வழக்கில், அக்டோபர் 30, 31-ஆம் தேதிகளில் ஜேட்லியிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT