பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு கடைசித் தேதி எது தெரியுமா?
அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுதில்லி: அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசியல் சாசன அடிப்படையில் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் தன்மை குறித்தான பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஆதார் வழக்கின் பல மனுதாரர்கள் சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய் மற்றும் கன்வில்கர் அடங்கிய அமர்வின் முன்பு மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி இம்மாத இறுதியில் முடிய உள்ளதாக சுட்டிக் காட்டினார்.
Advertisement
எனவே இந்த வழக்குகளை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் அவர் அமர்வின் முன்பு வேண்டுகோள் வைத்தார்
அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆதார் தொடர்பான வழக்குகளை தற்பொழுது விசாரிக்க அவசரம் இல்லை என்பதால் நவம்பர் முதல் வாரம் விசாரிப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. தேதி நீட்டிக்கப்படுமாயின் வழக்குகளை பின்னர் விசாரிப்பதில் தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று வழக்கறிஞர் ஷ்யாம் திவானும் சம்மதம் தெரிவித்தார்.