முகப்பு
இந்தியா

வறுமையால் ரூ.200-க்கு குழந்தை விற்பனை: தொடரும் திரிபுரா பழங்குடியினரின் அவலநிலை

திரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குடும்பம் ரூ.200-க்கு தங்களின் குழந்தையை விற்றுள்ளது. கடந்த 2 வருடங்களில் இது 5-ஆவது முறையாகும். 

Updated On : 6 டிசம்பர், 2017 at 3:49 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:47 PM

திரிபுரா மாநிலத்தின் தெற்கு மகாராணிபூர் என்ற இடத்தில் அமைந்துள்ள தெலிமுரா பிரிவில் இருக்கும் சாராட் சந்திரா ஏடிசி என்ற கிராமத்தில் பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். 

இங்கு வறுமையின் காரணத்தால் ஒரு வேளை உணவுக்காக ரூ.200-க்கு பழங்குடியின தம்பதி தங்களின் குழந்தையை விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கர்ணா டெப்பம்மா என்பவர், தன்னுடைய குடும்பத்தின் அடுத்த வேளை உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவரின் குழந்தையை ரூ.200-க்கு விற்பனை செய்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. நாங்கள் மொத்தம் ஏழு பேர் உள்ளோம். அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி எனது குழந்தையை ரூ.200-க்கு விற்றுவிட்டேன். நாங்கள் எங்களின் ஏழ்மை நிலை குறித்து பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். 

தற்போது வரை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை தான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் மாற்றி வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் எங்களால் கழிவறை கூட ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. 

எங்களுக்கென்று இங்கு எந்த வாழ்வாதாரமும் கிடையாது. நாங்கள் அனைவரும் அவ்வப்போது காட்டில் விளையும், மூங்கில் மற்றும் வைக்கோலை விற்றுதான் பிழைப்பு நடத்துகிறோம். அந்த வருமானம் எங்களுக்கு போதவில்லை. 

இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அனைத்து வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவர். ஆனால் எதையும் செயல்படுத்த மாட்டார்கள். இதுவரை மத்திய, மாநில அரசுகளின் எந்த நலத்திட்டங்களும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சாம்ப்ரி டெப்பம்மா என்ற மற்றொரு பழங்குடியினர் கூறும்போது,

கர்ணாவை எனக்கு நன்கு தெரியும். அவர்களின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. முன்பு 7 பேர் இருந்த அந்தக் குடும்பத்தில் இந்த சம்பவத்தால் 6 பேர் மட்டுமே உள்ளனர். அவர் கூறியது போன்று நாங்கள் பலமுறை எங்களின் நிலையை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார். 

திரிபுரா மாநிலத்தில் இதுபோன்று வறுமையின் காரணமாக குழந்தைகளை விற்பது கடந்த 2 வருடங்களில் 5 முறை நடைபெற்றுள்ளது. இதுவே கடந்த ஒராண்டில் 3 முறையாகும். 

முன்னதாக, இதேபோன்று ஆட்டோ ஓட்டுநரின் குடும்பம், வறுமை காரணமாக அவர்களின் குழந்தையை ரூ.200-க்கு விற்பனை செய்துள்ளது. தனது கணவரின் மருத்துவச்செலவுகளை சமாளிக்கும் விதமாக ரூ.5,000-க்கு பெண் ஒருவர் தன்னுடைய 11 நாள் குழந்தையை விற்பனை செய்துள்ளார். 

இருப்பினும் இதுபோன்று குழந்தை விற்பனையை தடுத்து வருவதாகவும், இவ்வாறு மீட்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் தாய், தந்தையரிடம் வழங்கி வருவதாக திரிபுரா அரசாங்கம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.