இந்தியா

ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்

DIN

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு விசாரணையின்போது, அவருக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்துமாறு தனது வழக்குரைஞருக்கு அறிவுறுத்தவில்லை என்று, தில்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளார்.
தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பதவி வகித்த காலகட்டத்தில், அந்த சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் குற்றம்சாட்டினர். இதையடுத்து, கேஜரிவால் உள்ளிட்டோரிடம் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் கேஜரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, ஜேட்லியிடம் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ஜேட்லிக்கு எதிராக ஜேத்மலானி தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், கேஜரிவாலின் அறிவுறுத்தலின்பேரில்தான், தாம் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக, பின்னர் ஒரு பேட்டியின்போது ஜேத்மலானி தெரிவித்தார்.
இதையடுத்து, கேஜரிவாலிடம் மேலும் ரூ.10 கோடி கேட்டு தனியாக ஒரு அவதூறு வழக்கை ஜேட்லி தொடுத்தார். 
ஆனால், அதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு, தனது வழக்குரைஞருக்கு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் கேஜரிவால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பொய்யான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக, கேஜரிவாலுக்கு எதிராக ஜேட்லி புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது பதிலளிக்கும்படி கேஜரிவாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஜேட்லிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையைப் பயன்படுத்தும்படி எனது வழக்குரைஞர்களுக்கு எந்தத் தருணத்திலும் நான் அறிவுறுத்தியதில்லை. இதுதொடர்பான ஜேட்லியின் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை. அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை, உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT