இந்தியா

சொகுசு கார் விவகாரம்: நடிகர் சுரேஷ் கோபி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

DIN

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான மலையாள நடிகரும், பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி விசாரணைக்காக போலீஸார் முன்பு ஆஜராக வேண்டுமென்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி ராஜா விஜயராகவன், "அடுத்த 3 வாரங்களுக்கு சுரேஷ் கோபியை போலீஸார் கைது செய்யக் கூடாது' என்று உத்தரவிட்டார்.
முன்னதாக, சுரேஷ் கோபி அண்மையில் புதுச்சேரி மாநிலத்தில் வசிப்பது போன்ற போலியான ஆவணங்களைக் காட்டி சொகுசு கார் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக கேரள காவல்துறை கடந்த 5-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த சொகுசு காரை வாங்கியதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கேரளத்தில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட கார்களை வாங்கினால் 20 சதவீத வரியைச் செலுத்தியாக வேண்டும். அதைத் தவிர்க்கவே சுரேஷ் கோபி, புதுவையில் கார் வாங்கியதாக வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதன்மை நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக தனக்கு முன்ஜாமீன் அளிக்குமாறு கோரி சுரேஷ் கோபி கடந்த செவ்வாய்க்கிழமை கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 
இதனை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி, "போலீஸ் விசாரணைக்கு சுரேஷ் கோபி உரிய முறையில் ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்காக வரும் 21-ஆம் தேதி போலீஸார் முன்பு அவர் நேரில் ஆஜராக வேண்டும். அடுத்த 3 வாரங்களுக்கு சுரேஷ் கோபியை போலீஸார் கைது செய்யக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, "புதுச்சேரியில் எனக்கு விவசாய நிலம் இருக்கிறது. அதை எனது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். புதுச்சேரியில் ஓர் இடத்தை வாடகைக்கு விட்டிருப்பதால் அங்கு எனது இரு வாகனங்களைப் பதிவுசெய்ய முடிவு செய்தேன். 
எனவே நான் போலியான ஆவணங்களை அளித்து வாகனங்களைப் பதிவு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் எனக்குப் பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டால் எனக்கு அவமதிப்பு மேலும் அதிகரிக்கும். 
என் மீதான வழக்கைப் பொறுத்தவரை அதன் புலன்விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். விசாரணைக்குழு விரும்பும்போது என்னிடம் எப்போதும் விசாரணை நடத்தலாம். எனவே எனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று சுரேஷ் கோபி தனது மனுவில் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT