முகப்பு
இந்தியா

குல்பூஷண் குடும்பத்தினர் அவமதிப்பு: பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை

குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினர் சந்திப்பு தொடர்பாக, மக்களவையில் வியாழக்கிழமை அறிக்கை வாசித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
பகிர்:

குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை தாக்கல் செய்தார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, அவரது தாயும், மனைவியும், இஸ்லாமாபாதில் கடந்த 25-ஆம் தேதி சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, குல்பூஷண் மனைவியின் காலணியில் கேமரா அல்லது 'சிப்' பொருத்தியிருப்பதாக சந்தேகித்த பாகிஸ்தான், அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பாகிஸ்தானின் இந்தச் செயல், இந்தியாவில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிரொலித்தது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை 22 மாதங்களுக்குப் பிறகு அவரது தாயாரும், மனைவியும் சந்தித்துள்ளனர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்தச் சந்திப்பை, பாகிஸ்தான் தனது விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டது.
விதவைக் கோலம்: குல்பூஷண் ஜாதவின் தாயாரும், மனைவியும் பாகிஸ்தான் தூதரகத்துக்குள் சென்றதும், உடன் வந்த இந்தியத் தூதர் வேறு அறையில் தங்க வைக்கப்பட்டார். குல்பூஷணின் தாயாரும், மனைவியும் மற்றொரு வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டு, காதணி, வளையல்கள், தாலி உள்ளிட்ட நகைகளைக் கழற்றுமாறு தூதரக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் அணிந்து சென்ற உடைகளுக்குப் பதிலாக வேறு உடைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதே போல், வேறு காலணிகளும் வழங்கப்பட்டன.
இந்தியாவில் பெண்கள் குங்குமம் அணிவது, திருமணத்தின் அடையாளம் என்று குல்பூஷணின் தாயார் எடுத்துக் கூறியும், பாகிஸ்தான் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
நெற்றியில் குங்குமம் கூட இல்லாத தனது தாயைப் பார்த்ததும், 'அப்பாவுக்கு என்ன ஆயிற்று?' என்று குல்பூஷண் ஜாதவ் கேட்டிருக்கிறார். ஹிந்து சமூக வழக்கப்படி, நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி ஆகியவை அணிவது சுமங்கலிப் பெண்களின் அடையாளமாகும். ஆனால், விதவைக் கோலத்துடன் அவர்கள் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியத் தூதர் உடனிருந்திருந்தால், அவர் ஆட் சேபம் தெரிவித்திருப்பார். ஆனால், அவர் வேறு அறையில் தங்க வைக்கப்பட்டார்.
சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்தபோது, குல்பூஷணின் தாயார், மனைவி ஆகியோரின் அணிகலன்கள், உடைகள் ஆகியவற்றை பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பித் தந்தனர். குல்பூஷணின் மனைவியின் காலணிகளை அவர்கள் திருப்பித் தரவில்லை. அந்தக் காலணிகளில் மின்னணு பதிவு கருவி பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று பாகிஸ்தான் தரப்பு தற்போது கூறி வருகிறது. மேலும், அதை தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
அபத்தமான குற்றச்சாட்டு: குல்பூஷண் ஜாதவின் தாயாரும், மனைவியும், தில்லி விமான நிலையத்தில் இருந்து துபை விமான நிலையம் சென்று, அங்கிருந்து இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்தடைந்தனர். ஒரு வேளை, அவர்களின் காலணிகளில் மின்னணு கருவி ஏதேனும் பொருத்தப்பட்டிருந்தால், அவர்கள் விமான நிலையங்களிலேயே பிடிபட்டிருப்பார்கள். ஆனால், விமான நிலையங்களில் நடைபெற்ற பரிசோதனையின்போது, அவர்களிடம் இருந்து மின்னணு கருவி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. மனிதநேய அடிப்படையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது. ஆனால், இந்தச் சந்திப்பின்போது, மனிதநேயமும், இரக்கமும் காட்டப்படவில்லை.
குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினரிடம் மிகப்பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அச்சுறுத்தப்பட்ட சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கு வார்த்தைகள் போதவில்லை.
பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, ஒட்டுமொத்த அவையும், இந்த அவையின் மூலமாக நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டனம் தெரிவிப்பார்கள் என்றும், குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, குல்பூஷணின் தாயாரும், மனைவியும் என்னைச் சந்தித்துப் பேசினர். அப்போது, குல்பூஷண் ஜாதவ் நெருக்கடியிலும், மன அழுத்தத்துடனும் இருப்பதுபோல் தெரிகிறது என்று அவர்கள் கூறினார். மேலும், ஜாதவின் உடல் நிலை குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரு நாடுகளும் ஒப்புக்கொண்டபடி சந்திப்பு நடைபெறாததால், பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், இந்தச் சந்திப்பை, பாகிஸ்தான் தனது விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டது என்று சுஷ்மா ஸ்வராஜ் தனது அறிக்கையில் குறப்பிட்டார்.
இதே அறிக்கையை, மாநிலங்களவையிலும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாசித்தார். இரு அவைகளிலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாகிஸ்தான் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கருத்துகள் வேண்டாமே!: முன்னதாக, மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கையை வாசித்து முடித்த பிறகு, இதுதொடர்பாக, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார். 'குல்பூஷண் ஜாதவ் விவகாரம், சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; எனவே, ஜாதவின் நலனைக் கருத்தில் கொண்டு, இதுதொடர்பாகக் கருத்து தெரிவிப்பதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், 'குல்பூஷணின் தாயாரும், மனைவியும் அவமதிக்கப்பட்டது, 130 கோடி இந்தியர்களின் குடும்பத்தினரை அவமதிப்பு செய்தது போலாகும்; இந்தச் செயலை சகித்துக் கொள்ள முடியாது' என்று கூறினார். மேலும், குல்பூஷண் ஜாதவ் பாதுகாப்புடன் இருக்கிறாரா என்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல், திமுக, பாஜக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், அகாலி தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் மத்திய அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →