ரூ.41 கோடிக்கு தொலைபேசி ஒட்டுக் கேட்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (இசிஐஎல்), ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து ரூ.41 கோடி மதிப்பிலான தொலைபேசி ஒட்டுக் கேட்பு கருவிகளை வாங்கியதில் நடைபெற்ற
அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (இசிஐஎல்), ஜெர்மனி நிறுவனத்திடம் இருந்து ரூ.41 கோடி மதிப்பிலான தொலைபேசி ஒட்டுக் கேட்பு கருவிகளை வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு வழங்குவதற்காக கடந்த 2004 முதல் 2010-ஆம் ஆண்டு வரை இந்தக் கொள்முதல் நடைபெற்றுள்ளது. இதில் கருவிகளை விற்பனை செய்வதற்கு உரிய தகுதி இல்லாத ஜெர்மனியின் இஎல்டி இண்டஸ்ட்ரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ஆதாரவாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரிகள் 5 பேர், கருவிகளை வழங்கிய ஜெர்மனி நிறுவனத்தின் உரிமையாளர், இந்தக் கொள்முதலுக்கு ஆலோசனை வழங்கிய தனியார் ஆலோசனை நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தொலைபேசி ஒட்டுக் கேட்டு கருவிகள் வாங்கியதில் சில முறைகேடு நடந்துள்ளதாக இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த மார்ச் மாதம் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது. முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ இப்போது பதிவு செய்துள்ளது.
இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், துணைப் பொது மேலாளர், இயக்குநர்கள் உள்ளிட்ட 5 அதிகாரிகள், இடைத் தரகராக செயல்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி, ஒப்பந்தத்தைப் பெற்ற ஜெர்மனி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.