பாலியல் குற்றச்சாட்டையடுத்து, மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் (67), தனது பதவியை வியாழக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார்.
இந்தத் தகவலை, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்பார்த்திருப்பதாக மேகாலய முதல்வர் முகுல் சங்மா, வியாழக்கிழமை காலையில் தெரிவித்திருந்தார்.
சண்முகநாதனை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் மாளிகையின் மாண்பை மீட்டெடுப்பதற்காக, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் சுமார் 100 ஊழியர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
ஆளுநர் மாளிகைக்குரிய மாண்பைக் குறைக்கும் வகையில், அதை இளம்பெண்களின் கேளிக்கை மன்றமாக சண்முகநாதன் மாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
""இளம்பெண்கள் வந்து செல்லும் இடமாக, ஆளுநர் மாளிகை மாறிவிட்டது. அவர்களில் பலர், சண்முகநாதனின் அறைக்கே நேரடியாக செல்ல முடியும்'' என்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அவர், தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், மேகாலய மாநில ஆளுநராக, கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த ஜோதி பிரசாத் ராஜ்கோவா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்துக்கான கூடுதல் ஆளுநர் பொறுப்பையும் சண்முகநாதன் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அருணாசலப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் சண்முகநாதன் கலந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.